செய்திகள்

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்துவற்கு உடனடி நடவடிக்கை -ஜனாதிபதி

அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மரக்கறிகளின் அதிகரித்த விலை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு பெரிதும் பாதிப்பினை செலுத்துகின்றது. அதனை கட்டுப்டுத்துவதற்கு உடனடியாக தலையிட வேண்டியுள்ளதென ஜனாதிபதி அவர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

மரக்கறி பயிரிடப்படும் பிரதேசங்களிலிருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதன்பின்னர் தம்புள்ளையில் இருந்து மீண்டும் குறித்த பிரதேசங்களுக்கு மரக்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. போக்குவரத்தின்போது இடம்பெறும் வீண்விரயத்தின் காரணமாக அறுவடை பெருமளவு வீணாகின்றது. இது ஒருபோதும் சரியான முறைமையாக இருக்க முடியதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்ட கம்பனிகளிடம் உள்ள அரச காணிகளில் தென்னை பயிருடன் மட்டுப்பட்டு இருக்காது மரக்கறி பயிர்ச் செய்கைக்கான வாய்ப்புகளையும் கண்டறிவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது நுகர்வோருக்கும் சிறிய வர்த்தகர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக என்றபோதும், அவை பாரியளவிலான வியாபாரிகளின் ஆதிக்கத்தின் காரணமாக எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இராணுவத்தினரின் உதவியுடன் அந்நடவடிக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பல பிரதேசங்களில் நெற் களஞ்சியங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஏனைய நெற் களஞ்சியங்களையும் புனரமைக்குமாறு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்தார்.

மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அவற்றிற்கு வழங்க முடியுமான உடனடித் தீர்வுகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

உமா ஓய போன்ற திட்டங்களை பாதுகாப்பதற்கு அதனை அண்டிய பிரதேசங்களில் வன ஒதுக்கீடுகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Back to top button