செய்திகள்

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அதிரடி அறிவிப்பு

மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டன. எனினும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.

அதனை நாளை 5 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக ஏற்கனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையிலேயே ,  இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய சுற்று நிரூபம் மற்றும் மேல் மாகாணத்திற்கான விசேட சுற்று நிரூபம் துரிதமாக வெளியிடப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 50 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய மேல் மாகாணத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 30 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார், வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன்  10 பேரின் பங்கேற்புடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை, நீச்சல் தடாகங்கள், விடுதிகள், கசினோ, களியாட்ட விடுதிகள் தொடர்ந்தும் மூடப்படும் அதேவேளை, ஸ்பா திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மரணித்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் இறுதிச்சடங்கை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரணச்சடங்களில் 15 பேர்  மாத்திரம் கலந்துகொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Back to top button