செய்திகள்

வடக்கு, கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு

யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக  இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் திங்கட்கிழமை அன்று வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழைப்பை இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து  யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு,  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பு அனைவரும் ஒன்றாக விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அரசின் கட்டளைக்கு அமைவாக யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் ஒத்துழைப்புடன் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட விடயத்திற்கு மேற்படி தரப்புக்கள் அனைவரும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் திங்கட்கிழமை வடக்கு கிழக்கில்  பூரண கதவடைப்பு போராட்டத்தை மேற்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைவரும் கோரியுள்ளனர்.

வர்த்தக சமூகத்தினர், தனியார் போக்குவரத்தது கழகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என அனைவரையும் திங்கட்கிழமை தங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு மேற்படி அனைவரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கையினை மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்ஏ. சுமந்திரன்,  செ. கஜேந்திரன், ஆகியோரும், சுரேஸ்பிறேமச்சந்திரன், அனந்தி சசிதரன்,சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் பிரதி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி மற்றும் சிவகரன் ஆகியோர் விடுத்திருந்தனர்.

Source : virakesari.lk

Back to top button