செய்திகள்

வடமாகாணத்தில் 26 பேருக்கு கொவிட் தொற்றுறுதி

வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 26 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் யாழ்ப்பாணத்தில் 21 பேரும் வவுனியா, முல்லைத்தீவில் தலா 2 பேரும், கிளிநொச்சியில் ஒருவரும் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 104 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தியதில் 8 பேருக்கு தொற்றுதியாகியுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி கடைகளின் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுடன் நேரடித் தொடர்புடைய மூவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டிருந்த இருவரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும், தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இருவருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை நேற்றைய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 29ஆவது சத்திரச்சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பிய கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Back to top button