விகாஸ் துபே: கான்பூர் என்கவுண்டர் வழக்கில் கைதானவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு
கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட விகாஸ் துபேயை உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் அப்போது அங்கிருந்து தப்பிடயோட முயற்சித்த விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மேற்கு கான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், “கார் கவிழ்ந்ததும் விகாஸ் துபே அங்கிருந்து தப்பித்தோட முயன்றார். அவரை பிடிப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சியின்போது அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விகாஸ் துபே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறியதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதை காவல்துறையினர் உறுதிசெய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தப்பியோட முயற்சித்த விகாஸ் துபேயை பிடிக்க முயற்சித்ததில் நான்கு காவல்துறையினர் காயமடைந்ததாக கூறும் கான்பூர் காவல்துறையினரின் ஐஜி மொகித் அகர்வால், இறுதியில் விகாஸ் துபே காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட விகாஸ் துபே
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான விகாஸ் துபே நேற்று (ஜூலை 9) மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை நேற்று உறுதிப்படுத்திய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, விகாஸ் துபேவைக் கைது செய்தது மத்தியப் பிரதேச மாநில காவல்துறைக்கும் மிகப்பெரிய வெற்றி என்றுதெரிவித்திருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாள் கோயிலின் பாதுகாவலர்களால் விகாஸ் துபே நேற்று காலை பிடித்து வைக்கப்பட்டதாகவும் பின்பு அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் நடந்தது என்ன?
60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நடந்த முயற்சியின்போது குற்றவாளி தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.
பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.
இதையடுத்து, தாக்குதல் நடந்த அந்த கிராமத்தையே சுற்றி வளைத்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மேலும், விகாஸ் துபே உடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் செல்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி, “சாபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திக்ரு எனும் கிராமத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய மோசமான குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றார்கள். ஜேசிபி எந்திரத்தை நிறுத்தி அவர்கள் தடுக்கப்பட்டனர். கட்டடங்களின் கூரை மீது இருந்த குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்,” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
எனவே, இதற்கு அடுத்தடுத்த தினங்களில் விகாஸ் துபேவுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டதாகவும், ஒருவர் என்கவுண்டயில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.