விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலின் எண்ணெய் கசிவால் ஏற்பட கூடிய ஆபத்தை தடுக்க முழு அளவில் நடவடிக்கை – இராணுவத்தளபதி
அம்பாறை – சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 38 கடல்மைல் தூரத்தில் தீப்பற்றியுள்ள எண்ணெய் கப்பலால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தீப்பற்றியுள்ள கப்பல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த இராணுவத்தளபதி மேலும் தெரிவிக்கையில் ,
அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 38 கடல்மைல் தூரத்தில் கிழக்கு பகுதியில் ஈராக்கிலிருந்து இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலொன்று வியாழக்கிழமை காலை தீப்பற்றியது.
வியாழனன்று காலை முதல் இலங்கை கடற்படை , விமானப்படை தீயைக்கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளன. தீப்பற்றிய கப்பலில் இருந்த நபர்கள் மீட்க்கப்பட்டு பிரிதொரு கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கப்பல் தீப்பற்றிய போது 38 கடல் மைல் தூரத்தில் காணப்பட்டாலும் கப்பலின் எஞ்சின் செயழிலந்துள்ளதால் 22 கடல் மைல் கரையை நோக்கி நகர்ந்திருக்கிறது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் இலங்கைக்கு சமாந்தரமாக தெற்கு கடல் நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
கடற்படையின் கப்பல்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று விமானப்படையின் விஷேட விமானத்தை அனுப்பி தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் தீயைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை இந்திய கடற்படையின் கடல் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இந்திய கப்பல் , இந்திய கடல்பாதுகாப்பு கப்பல் என்பவற்றின் உதவியுடன் குறித்த பகுதியில் தீயணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையின் கடற்படை , விமானப்படை , இந்திய கடற்படை மற்றும் கடல் பாதுகாப்பு குழு என்பன தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த கப்பலில் காணப்படுகின்ற எண்ணெய் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இது வரையில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் 2 இலட்சத்து 70 ஆயிரம் டொன் மசகு எண்ணெய் காணப்படுகிறது.
இது தவிர கப்பல் பிரயாணம் செய்வதற்கு தேவையான 1700 தொன் எண்ணெய்யும் இந்த கப்பலில் காணப்படுகிறது. கப்பல் தீப்பற்றியுள்ளதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அயல் நாடான இந்தியா முன்வந்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாக தீப்பற்றியுள்ள குறித்த கப்பல் இலங்கையை நோக்கி நகர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத விதமாக ஏதேனுமொரு வகையில் கப்பலில் உள்ள எண்ணெய் கசிய ஆரம்பிக்குமானால் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடற்படை தயார்படுத்தல்களை முன்னெடுத்துள்ளது என்றார்.