வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலருக்கு கொரோனா ; இலங்கையர்களை அழைத்துவருவது இடைநிறுத்தம்
நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் பலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து, நாடு திரும்பிய 157 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு திரும்பிய 157 பேரில், குவைத்திலிருந்து வந்த 90 பேருக்கும், டுபாயிலிருந்து வந்த 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக கட்டாரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தரவிருந்த ஒரு தொகுதி இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், கட்டார், குவைட், மாலைத்தீவு, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் கடந்த சில தினங்களாகவே அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதுவரை வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான 5420 இலங்கையர்கள் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ரத்து செய்யப்பட்ட விமானத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்திருந்த இலங்கையர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்குமாறு அந்நாட்டிற்கான இலங்கை பதில் தூதுவ ருக்கு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கடந்த சில தினங்களாகவே உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இவ்வாறு குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் இறுதியாக உயிரிழந்தமையையும் சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.