செய்திகள்

வெளியானது பயணக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பு

நாட்டிலுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் 25 ஆம் திகதி அதிகாலை வரையிலும், மீண்டும் 25 ஆம் திகதி இரவு முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரையிலும் இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இதேவேளை இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

Source : virakesari

Back to top button