செய்திகள்

ஹிஷாலினி விவகாரத்தில் ரிஷாத்தை கைதுசெய்ய நடவடிக்கை : வழக்கு விசாரணையின் முழு விபரம் இதோ !

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி,  உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும்,  பொலிஸ்  தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நேற்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.  

விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான  அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதனை மன்றுக்கு விடயங்களை முன் வைக்கும் போது இரு வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார்.

 அத்துடன்  நீதிவானின் ஆலோசனைக்கு அமைய,   சிகிச்சைகளினிடையே தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக ஹிஷாலினி குறிப்பிட்டதாக வெளிப்படுத்தியதாக கூறப்படும், கொழும்பு தேசிய வைத்தியசாலிஅயின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தற்போது வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் வைத்தியர் ரந்திக்கவிடம்  விஷேட வாக்கு மூலத்தினை பதிவு செய்யவுள்ளதாகவும் மன்றுக்கு அரிவிக்கப்பட்டது.

 இதற்கான தொடர்பாடலை ஏர்படுத்தித் தருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அறிவித்ததாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவும் இதன்போது நீதிவானுக்கு விளக்கினார்.

இந நிலையில்  இந்த விவகாரத்தில்  ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட  நால்வரினதும் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவர்களின் விளக்கமறியல் காலத்தை  எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இந்த உத்தர்வை பிறப்பித்தார்.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று முற்பகல் 10.10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது இந்த விவகாரத்தில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின்  308,358,360 ஆவது அத்தியாயங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத் தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை,  துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தரகரான பொன்னையா பண்டாரம்  அல்லது சங்கர், ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு  கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி  கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா,  ரிஷாத்தின் மைத்துனர் கிதர் மொஹம்மட்  சிஹாப்தீன் இஸ்மத்  ஆகிய நால்வரும் நேற்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்கள் விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய,  கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண்  பொலிஸ் பரிசோதகர் இனோகா, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார,  விசாரணைகளை மேற்பார்வை செய்யும் கொழும்பு  குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா,  சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின்  பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகாகுமாரி ஆகியோர்  மன்றில் ஆஜரானதுடன் அவர்களுக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  திலீப பீரிஸ், அரச சட்டவாதி ஹங்ச அபேரத்னவுடன்  ஆஜரானார்.

முதல் சந்தேக நபரான தரகர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய கமகேவும், ரிஷாத்தின் மாமனார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும்,  3 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவிக்காக  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, ருஷ்தி ஹபீப் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும்,  ரிஷாத்தின் மைத்துனருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கால்லிங்க இந்ரதிஸ்ஸவும் ஆஜராகினர்.

 பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக, சிரேஷ்ட சட்டத்தரணி கனேஷ் ராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் பிரசன்னமானது.

இந் நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொகுப்பை மன்றில் முன் வைத்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  வாதங்களை முன் வைத்தார்.

‘ இவ்விவகாரத்தில், ஹிஷாலினியின் சடலம் கடந்த  ஜூலை 31 ஆம் திகதி நுவெரெலியா நீதிவான் முன்னிலையில் 2 ஆம் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.  

இதன்போது அங்கு ஹிஷாலினியின் தாயார், தந்தை, சகோதரர் உள்ளிட்டவர்கள் ஆஜராகி, சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியிருந்தனர்.

 சடலம்  மீது கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சிரேஷ்ட சட்ட மருத்துவ நிபுணர் ஜீன் பெரேரா தலைமையிலான குழுவினரால் பேராதனை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது சடலம் எம்.ஆர்.ஐ., சி.ரி. ஸ்கேன் பரிசோதனைகளுக்கு முதலில் உட்படுத்தப்பட்டது. மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அதன்  பெறுபேறுகள் மிக விரைவில் கிடைக்கவுள்ளன.

 அதன் பின்னர், தற்போதும் சட்ட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக்கினால் வழங்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பீடு செய்து விஷேட அறிக்கை  மன்றுக்கு வழங்கப்படும்.’ என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் தீலீப பீரிஸ் தெரிவித்தார்.

இந் நிலையில், உடலில் தீ பரவிய பின்னர், அது அணைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு ஹிஷாலினி அழைத்து செல்லப்படும் போதும் அவர், சாதாரணமாக நினைவுடன் கூடிய பேசும் நிலையில் இருந்ததாக கூறப்படும்  விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

‘ ஹிஷாலினி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்ட்ட போது அங்கு சென்றுள்ள பொரளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஹிஷாலினி என்ன நடந்தது ? என்ன நடந்தது என கூறுங்கள் என வினவியுள்ளார். அப்போது அருகே தாதி ஒருவரும் இருந்துள்ளார். இது  தொலைபேசியில் வீடியோவாகவும் பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.

 அப்போது அவர் பேசும் நிலையில் இருக்கவில்லை.  அவர் எனக்கு அடிக்க, தொலைபேசி போன்ற சொற்களை உச்சரித்ததாக கூறப்பட்டாலும் அதில் தெளிவில்லை.

 அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போதும் பேசும் நிலையில் இருந்திருந்தால், வீட்டார் ஏன்  எப்படி தீ பரவியது என்ற விடயத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கவில்லை. 2 ஆம் சந்தேக நபரிடம் இது குறித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான  விடயங்களை அவர் கூறியுள்ளார்.

 முதல் வாக்கு மூலத்தில் எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், 2 ஆம் வாக்கு மூலத்தில், லைட்டர் பற்றிக்கொண்டது என குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

3 அம் சந்தேக நபரிடம் இது குறித்து விசாரித்த போது, தான் அவ்விடத்துக்கு வரும் போதும் தீ அணைக்கப்பட்டிருந்ததாகவும், என்ன நடந்தது என வினவிய போது,  தீ பற்றிக்கொண்டது,   உடல் எரிகிறது.’ என பதிலளித்ததாக தெரிவித்துள்ளார்.’ என குறிப்பிட்டதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது என தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரி குறித்த விசாரணை:

இந் நிலையில் ஹிஷாலினி தீ காயங்களுக்கு உள்ளான விடயம் அவரது வீட்டாருக்கு முதல் சந்தேக நபர் ஊடக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர்.  

இதன்போது, அவர்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட்த் பதியுதீனின் வீட்டுக்கு செல்லும் போது அங்கு வீட்டாருடன்  பொலிஸ் தலைமையகத்தின்  ஒரு பிரிவுக்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இருந்துளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தொடர்ந்து அதனை விளக்கினார்.

‘ ஹிஷாலினி வைத்தியசாலையில் இருந்த போது ரிஷாத்தின் வீட்டுக்கு அவரது தாயார் சகோதரர் உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுமார் 8 பேர் வரையில் இருந்துள்ளனர். 

அங்கு பொலிஸ் அதிகாரி ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார். இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரி, ஹிஷாலினியின் அறையை சகோதரருக்கு காட்டியுள்ளதாகவும், அங்கிருந்த மண்ணெண்ணை போத்தல் ஒன்றரை வருடங்கள் பழமையானது, அதனை திறக்கக் கூட முடியாதென  தெரிவித்ததாகவும் சகோதரர்  வாக்கு மூலம் அளித்துள்ளார். சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டதாகவும் வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளது.

 ஹிஷாலினியின் உடலில் தீ பரவியதால் அவர் அவரது அறையிலிருந்து  சமயலறை ஊடாக வீட்டு முற்றம் வரை ஓடி வந்ததாக கூறப்படுகிறது. எனினும்  உடலில் 72 சத வீத எரிவை ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய தீ பரவல் இருந்த போதும், வீட்டில் வேறு எங்கும் தீ பரவிய, அடையாளங்கள் இல்லை என்பது புதுமையானது.

இந் நிலையில், குற்றம் அல்லது சம்பவ இடம் திரிவு படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

 இந் நிலையில் இது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் ஒரு பிரிவுக்கு பொறுப்பான குறித்த அதிகாரியை நாம் மன்றில் முன்னிறுத்த எதிர்ப்பார்க்கின்றோம்.

 மாமியாரின் வாக்கு மூலம்:

 இது ஒரு புறமிருக்க, நாம் அவ்வீட்டில் இருந்த, ரிஷாத்தின் மாமியாரிடம் வாக்கு மூலம் பதிவு செய்தோம். அவர் ஹிஷாலினி தீ வைத்துக்கொண்டாரா, எவரேனும் வைத்தானரா அல்லது  அவரின் உடலில் தீ பரவியதா என்பது தொடர்பில் தனக்கும் ஊகிக்க முடியாதுள்ளதாகவும், என்ன நடந்தது என கடவுளே அறிவார் எனவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 அவருக்கு உள்ள அதே சந்தேகம் எமக்கும் உள்ளது. ஹிஷாலினி லைட்டர், தீ பெட்டி பயன்படுத்த மாட்டார் என மாமியார் குறிப்பிட்டுள்ளார்.

 அப்படியானால், கடவுளுக்கு மட்டும் தெரிந்த அந்த விடயத்தை வெளிபப்டுத்த பூரண விசாரணை அவசியமாகும்.

அத்துடன், ஹிஷாலினி தங்கிய அறையில், கதவின் பின்னால், நீல நிற பேனையால்  ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்ட ‘ என் சாவுக்கு காரணம்’ எனும்  வசனம் தொடர்பில் எமது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

குறித்த வசனம் எழுதப்பட்ட காலப்பகுதி, அக்கையெழுத்து யாருடையதென்பது இங்கு மிக முக்கியமாக கண்டறியப்படவேண்டி உள்ளது. ஏனெனில் அந்த வசனம் எழுதப்பட்டிருந்த போதும், அதனை எழுதியதாக சந்தேகிக்கத்தக்க பேனை கண்டுபிடிக்கப்படவில்லை.

 தனக்குத் தானே தீ வைத்ததாக வெளிப்படுத்திய வைத்தியர்:

 இந் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்படும் போது அவர் நினைவுடனேயே இருந்தார் என பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ள விடயமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்தியர் ரந்திகவிடம் விசாரணை செய்ய்ய வேண்டியுள்ளது.

( இதனை அறிவிக்கும் போது தலையீடு செய்த நீதிவான்,  பிரேத பரிசோதனை செய்த  வைத்தியர், அந்த விடயத்தை சிகிச்சை அறிக்கைகள் பிரகாரம் பெற்றிருக்கலாம். சிகிச்சை கட்டில் அட்டையில் தனக்குத் தானே சிறுமி தீ வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதே என சுட்டிக்காட்டினார். அவரிடம் தெளிவான வாக்கு மூலம் பெறாமல் இருப்பது ஏன்? என வினவினார்)

 இந்த வைத்தியரே, சிறுமி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக வெளிப்படுத்தியுள்ள வைத்தியர். அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.  அவரிடம் வககு மூலம் ஒன்று விரைவில் பதிவு செய்ய வேண்டும்.  ஹிஷாலினி, தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 3 வைத்தியர்கள் அவரை  தீ விர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க முன் வரை பரிசோதித்துள்ளனர். அவர்களில் ரந்திக்க வைத்தியரும் ஒருவர். ஏனைய வைத்தியர்கள் வெளிப்படுத்ததாத விடயத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

 கடந்த ஜூலை 3 ஆம் திகதி 11.20 மணியளவில், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க மிக அண்மித்த வேளையில் அவ்வைத்தியர் ஹிஷாலினியை பரிசோதித்துள்ளார். எனவே அது குறித்த விசாரணைகள் உமது ஆலோசனைகள் பிரகாரம் முன்னெடுக்கப்படும்.

6 பணிப் பெண்களின் வாக்கு மூலம்:

  ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியற்றிய 6 பணிப் பெண்களின் வாக்கு மூலமும்  மேலதிக விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ( முன்னதாக கடந்த தவணையில் இருவரின் வாக்கு மூலம் முன் வைக்கப்பட்டிருந்தது) அவை ஊடாக அவ்வீட்டில் சேவையாற்றிய பணிப் பெண்கள், 3 ஆம் சந்தேக நபரால் எவ்வாறு நடாத்தப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

 எவ்வளவு வேலை செய்தாலும் திருப்தியடையாத  3 ஆவது சந்தேக நபர்,  பெரும்பாலும் எஞ்சிய உணவுகளையே பணியாளர்களுக்கு வழங்கியதாக அவ் வாக்கு மூலங்களில் கூறியுள்ளனர். ஒருவர், ஒரு முறை மலசல கூடத்தை சுத்தம் செய்யவில்லை என்பதற்காக அளிக்கப்பட்ட நூதன தண்டனை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வாறு இதற்கு முன்னர் எங்கும் வேலை செய்து பழக்கமில்லாத 16 வயதான ஒருவர் நடாத்தப்பட்டிருந்தால் அவர் தற்கொலை செய்வது கூட ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

 அத்துடன் 4 ஆவது சந்தேக நபர், அவ்வீட்டில் பணிப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தமை தொடர்பில் இருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். தொடுகை,  வாய் மொழி ஊடாக சில்மிஷங்கள் இடம்பெற்றதாக அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாத்திடம் வாக்கு மூலம் :

 அத்துடன் வழக்கின் முதல் சந்தேக நபரான தரகரே  இந்த கடத்தல் அல்லது சுரண்டல் விவகாரத்தில் முக்கிய நபராவார். அவரே டயகமவிலிருந்து பெண்களை அழைத்து வந்து அங்கு சேவைக்கு அமர்த்தியவராவார்.

சி.ஐ.டி. தடுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அவர் இந்த தரகரை தனக்கு தெரியாது என கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் அளிக்கும் போது தெரிவித்துள்ளார்.  அத்துடன் பணிப் பென்கள் தொடர்பில் தனது மாமனாரே பொறுப்பாக செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

 ஹிஷாலினியுடன் விஷேடமாக கதைத்து பழகிய ஞாபகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ அவரது வாக்கு மூலம் தொடர்பில் விசாரணை நடக்கிறது. . மிக விரைவில் அவரையும் இந்த கூட்டில் ஏற்றுவோம்.

விசாரணைகள் தொடரும் நிலையில், ரிஷாத்தின் வீட்டிலிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் செயற்பாடு மற்றும் செயலிழந்தமை குறித்து உறுதியான விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள சி.சி.ரி.வி. கமராவின் வி.டீ.ஆர். பதிவு இயந்திரத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு  அனுப்பி அறிக்கை பெற அனுமதி கோருகிறேன். ( அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.)

தற்போதும் கைதாகியுள்ள இந்த 4 சந்தேக நபர்களுக்கு பிணையளிக்கப்பட்டால் அது விசாரணைகளை பாதிக்கும். அத்துடன் பொது மக்கள் குழப்ப நிலை ஒன்றும் ஏற்படும். எனவே பிணை சட்டத்தின் 14 ஆம் அத்தியாயத்தின் கீழ், இவர்களுக்கு பிணையளிக்க நாம் எமது கடுமையான ஆட்சேபனத்தை முன் வைக்கின்றோம். என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் கூறினார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி கனேச ராஜ் வாதங்களை முன் வைத்தார். அவர்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் வாதங்களின் அடிப்படையில், சந்தேக நபர்களுக்கு பிணையளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.

 இதனையடுத்து  முதல் சந்தேக நபரான தரகர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய கமகே வாதங்களை முன் வைத்தார்.

தனது சேவை பெறுநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் வாதிட்டார்.  தனது சேவை பெறுநர், ஹிஷாலினியை வேலைக்கு அழைத்து வந்தமை, ஒரு மேன் பவர் நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு ஒத்தது என வர்ணித்த அவர், அது ஒரு போதும் சட்ட விரோத செயல் அல்ல என வாதிட்டார். 

அதனால் தனது சேவை பெறுநருக்கு ஏதேனும் ஒரு நிபந்தனையின் கீழ் பிணையளிக்குமாறு அவர் கோரினார். தனது சேவை பெறுநர், இந்த விடயத்தில் உண்மையை கூறியதாலேயே இன்று விளக்கமறியலில் இருப்பதாகவும், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்திருந்தால் சாட்சியாளர் பட்டியலில் இருந்திருப்பார் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ரிஷாத்தின் மாமனார் சார்பில் பிணை கோரி வாதிட்டர்.

‘ எனது சேவை பெறுநருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின்  308,358,360  ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தி பீ அறிக்கைகள், மேலதிக அறிக்கைகள் மன்றில் முன் வைப்பதன் நோக்கம் என்ன ? சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் விடயங்களை சாட்சியங்களை முன் வைப்பதே அதன் நோக்கமாகும். இதனை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கள் ஊடாக உறுதியாக கூற முடியும்.

 கடத்தல் அல்லது சுரண்டல் தொடர்பில் எனது சேவை பெறுநர் மீது ( த.ச.கோ.360 ஆவது அத்தியாயம்)  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அடிமைத் தனத்துக்கு உட்படுத்தியமை அல்லது கட்டாய ஊழியம் பெற்றமை தொடர்பிலும் குற்றம் சட்டப்பட்டுள்ளது.

 மாதாந்தம் சம்பளம் வழங்ககப்பட்டுள்ளது என்றால், அதனை அவரது பெற்றோர் பெற்றுக்கொன்டதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்கள் என்றால் எப்படி கட்டாய ஊழியமாக அதனை கருத முடியும்.

 அத்துடன் இந்த சம்பவத்தில், முதலில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பீ.அறிக்கையில் கூறப்பட்ட விடயத்தை பாருங்கள். அதில் ஹிஷாலினியின் தாயாரான  ராஜமாணிக்கம் ரஞ்சனி ஹிஷாலினியின் விருப்பத்துடன் அவர் முதல் சந்தேக நபருடன் வீட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இங்கு எப்படி கட்டாய ஊழியம் உள்ளிட்ட குற்றச்ச்சாட்டுக்களை சுமத்த முடியும்.

அத்துடன் அவர் மீதுள்ள மற்றொரு குற்றச்சாட்டே, கொடூரத்துக்குட்படுத்தியமை. தண்டனை சட்டக் கோவையின் அக்குற்றச்சாட்டு  தொடர்பிலான வரைவிலக்கணத்தை பாருங்கள். அதாவது 18 வயதின் கீழான எவரேனும் ஒருவரை  கட்டுக்காப்பில், பொறுப்பில் அல்லது  பராமரிப்பில் வைத்திருக்கும் எவரும்  அத்தகையவரை ( கண் பார்வைக்கு அல்லது செவிப் புலனுக்கு அல்லது அவயவத்திற்கு அல்லது உடல் உறுப்பொன்றுக்கு  ஊறு அல்லது கண் பார்வை இழப்பு அல்லது  ஏதேனும் உளவியல் சீர் குலைப்பு உட்பட) துயரத்தை அல்லது உடல் நலப் பாதிப்பொன்றினை  ஏற்படுத்தும் சாத்தியமுள்ள முறையொன்றில் வேண்டுமென்றே தாக்குகின்ற,  துன்புறுத்துகின்ற அசட்டை செய்கின்ற, கைவிடுகின்ற, அல்லது அத்தகைய ஆளை தாக்குவிக்க,  துன்புறுத்துவிக்க, கைவிடப்படவிக்க, செய்கின்ற எவரும்  பிள்ளைகளை கொடுமைப்படுத்தல் எனும் தவறை செய்கின்றனர் என அவ்வத்தியாயம் கூறுகின்றது. அப்படியானால், ஹிஷாலினி எனது சேவை பெறுநரின் பொறுப்பிலா இருந்தார். இதுவும் அடிப்படையற்ற வகையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இவற்றுக்கு எந்த சான்றுகளும் இல்லை.

இதே சட்ட மா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை மீறல் மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் சத்தியக் கடதாசியொன்றினை தாக்கல் செய்தது. அதில் ஹிஷாலினி தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக கூறும் வைத்தியரின் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் ஏன் அதனை இங்கு நீதிவான் கேட்கும் வரை மறைக்க வேண்டும்.

 ரஜின எதிர் லியனகே வழக்குத் தீர்ப்பின் பால் அவதானம் செலுத்துங்கள். ஒரு வழக்கில் சாட்சிகளில் வலுவாக அல்லது பலவீனமாக இருப்பின் கண்டிப்பாக சந்தேக நபர்களுக்கு பிணையளிக்கப்படல் வேண்டும் என அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

  எனது சேவை பெறுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் பிணையளிக்க முடியுமானவை. அத்துடன் அவருக்கு எதிராக கூறும் சாட்சிகள் மிக பலவீனமானவை. எனவே எந்தவொரு அடிப்படையிலும் எனது சேவை பெறுநருக்கு பிணையளிக்குமாறு கோருகின்றேன். ‘ என  ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன வாதிட்டார்.

 இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, ருஷ்தி ஹபீபுடன், ரிஷாத்தின் மனைவி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வாதிட்டார்.

‘ இவ்வழக்கின் பிணை வழங்கும் அதிகாரம் பூரணமாக நீதிவானுக்கு உள்ளது.  தற்போதைய நிலையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பிணையளிக்கத் தக்கவை. நாம் இவர் இதனை செய்திருப்பார் என இப்போது ஊகங்களுக்கு வந்து செயற்பட முடியாது.

அரசியலமைப்பின் பிரகாரம், ஒருவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் வரை, அவர் நிரபராதியே.

 ஹிஷாலினி வேலைக்கு அமர்த்தப்பட்டது சட்ட விரோதமான செயல் அல்ல. அது ஒழுக்கவியலுக்குட்பட்டது என சிலரால் கூறப்பட்டாலும், அது சட்டத்துக்கு முரணானது அல்ல. இதற்கு முன்னர் அங்கு வேலை செய்தவர்களின் வாக்கு மூலத்தை வைத்து, இவரையும் ( ஹிஷாலினி) கொடூரத்துக்கு உட்படுத்தியதாக கூற விளைவது நியாயமற்றது.

( இதன்போது அவ்வீட்டில் வேலை செய்த ஒருவரின் தொலைபேசி இலக்கத்தின் விபரங்களை மன்றுக்கு சமர்ப்பித்து அனில் சில்வா தொடர்ந்து வாதிட்டார்)

 ஹிஷாலினி தீ காயங்களுக்கு உள்ளானதும் எனது சேவை பெறுநர் எதனையும் செய்யவில்லை என கூறினார். அது முற்றிலும் பொய்யனது. ஜூலை 3 ஆம் திகதி காலை 6.45 மணியளவில்  பதிவான இந்த சம்பவம் தொடர்பில், வீட்டின் சேவகன் ஒருவரின்  தொலைபேசியிலிருந்து காலை 6.49 மணிக்கு சாரதிக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சாரதிகள் எவரும் தங்குவதில்லை. அவர்கள் மற்றைய வீட்டிலேயே தங்கினர்.  அத்துடன் எனது சேவை பெறுநருக்கோ வீட்டிலிருந்த ஏனையோருக்கோ வாகனம் செலுத்த தெரியாது. எனவே தான் சாரதிக்கு அழைப்பெடுக்கப்பட்டது.

 எனினும் சாரதி வரவில்லை. மீள 6.52 இற்கு எனது சேவை பெறுநர் அவரது தொலைபேசியிலிருந்து சாரதிக்கு அழைப்பெடுத்தார். 7.00 மணிக்கு மீளவும் அழைப்பினை எடுத்துள்ளார். 7.01 இற்கு சாரதி ஸ்தலத்துக்கு வந்துள்ளார்.

 சாரதி வந்ததும், அவர் 7.03 இற்கு 1990  அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார். ஏனெனில் பெரும்பாலான பகுதி எரிந்த நிலையில் ஒக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் அம்பியூலன்ஸ் வண்டியிலேயே உள்ளது.

 பின்னர், 7.11 மணிக்கு அம்பியூலன்ஸ் வந்துள்ளது. அதில் அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கிருந்து 7.30 மணிக்கு முன்னதாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 எனினும் வைத்தியசாலை அனுமதி அட்டையில் 8.10 என நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி அட்டை எழுத எடுத்த நேரத்துக்கு எனது சேவை பெறுநர் பொறுப்புக் கூற முடியாது. எனது சேவை பெறுநர் தன்னாலான விடயங்களை செய்து  ஹிஷாலினியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

 இங்கு பார்த்த பார்வைக்கு  வழக்கொன்றினை முன்னெடுக்க எந்த விடயமும் இல்லை. எனவே எனது சேவை பெறுநருக்கு பிணையளிக்க வேண்டும்.

 அத்துடன் நாட்டில் நிலவும்  கொவிட் நிலைமையுடன் கூடிய நிலவரத்தையும் பிணை வழங்க ஏதுவன காரணியாக கருத்தில் கொள்ளவும். இந்திய உயர் நீதிமன்றம், விக்டோரியா உயர் நீதிமன்றம், நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை இது குறித்து முன் வைக்கின்றேன்.’ என ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா வாதிட்டார்.

 இதனையடுத்து நான்காம் சந்தேக நபரான மைத்துனர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ வாதிட்டார்.

‘ இந்த விசாரணை  ஜூலை 3 ஆம் திகதி ஆரம்பித்தது. 16 வயது பிள்ளைக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த விசாரணையே அது. பீ. மற்றும் மேலதிக விசாரணை அறிக்கைகளில் அது தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

 அப்போது எனது சேவை பெறுநரின் பெயர் எங்கும் இல்லை.

 பின்னர் ஜூலை 7, ஜூலை 14 மற்றும் ஹிஷாலினி இறந்த பின்னர் ஜூலை 15 ஆம் திகதிகளில் மேலதிக விசாரணை அறிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் எங்கும் எனது சேவை பெறுநர் தொடர்பில் ஒரு துளியேனும் எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை.

 எனினும்,   ஜூலை 19 ஆம் திகதி மன்றில் முன் வைக்கப்ப்ட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னர் ஜூலை 26 ஆம் திகதியே முதன் முதலாக எனது சேவை பெறுநர் தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்ப்ட்டுள்ளன.

 அதுவும் இந்த  வழக்குடன் தொடர்புபடாத, ஏற்கனவே ரிஷாத் வீட்டில் சேவையாற்றியதாக கூறப்படும் இருவர் அவர்களது வாக்கு மூலங்களில் 5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பிலேயெ கூறப்பட்டுள்ளது.

 ஒரு முறைப்பாடு கூட இல்லாமல், வெறுமனே விசாரணையில் கூறப்பட்ட ஒரு விடயத்தை மையப்படுத்தி, ஹிஷாலினி விவகாரத்தில் எனது சேவை பெறுநரை எப்படி கைதுசெய்ய முடியும். இது சட்ட விரோத கைது. சட்ட விரோத நடவடிக்கை.

 அப்படியே பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன் வைக்க வேண்டுமாயின், அப்பெண்களின் முறைப்பாட்டுக்கு அமைய தனியாக அதனை முன் வைக்க வேண்டும்.

 இந்த வழக்கானது தண்டனைச் சட்டக் கோவையின் 308 (அ) 2, 360 ஆ, 358 அ(1) அ, 358 அ(1) ஆ ஆகிய பிரிவுகளின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் தாங்களை எனது சேவை பெறுநர் துஷ்பிரயோகம் செய்ததாக  5 வருடங்களின் பின்னர் கூறும் விடயம் இந்த சட்ட பிரிவுகளின் கீழ், கட்டாய ஊழியம், கடத்தல் அல்லது சுரண்டல், கொடூரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்குள் எப்படி உள்ளடங்கும்.

 எனது சேவை பெறுநருக்கு எதிராக இவ்வழக்கில் எந்த ஒரு சான்றுகளும் இல்லை. எனவே இவ்வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என கலிங்க இந்ரதிஸ்ஸ வாதிட்டார்.

 எவ்வாறயினும்  குறித்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பின்னர் சட்ட மா அதிபர் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

 இவ்வாறான நிலையில் முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்புகள் காரணமாக விசாரணைகளில் தலையீடு செய்யவோ, சாட்சிகளை காணாமல் ஆக்கவோ முடியும் என தெரிவித்தும்,பொது மக்கள் கொந்தளிப்பை காரணம் காட்டியும் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்தார். அதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

Source : virakesari.lk

Back to top button