செய்திகள்

​77 பேருக்கு கொரோனா தொற்று: தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினத்தில் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 72 வீதமானவர்கள் ஆண்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

245 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுள்ளோருடன் தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

எனினும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் அவர் கூறினார்.

எனவே, சமூகப் பொறுப்புணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் சுயமாக தனிமையாகி கண்காணிக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு வௌிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும் அவர் தெரிவித்தார்.

வௌிநாட்டிற்கு சென்றமைக்கான காரணம் அல்லது, அங்கிருந்து நாட்டிற்கு திரும்பியமைக்கான காரணம் தொடர்பில் தற்போது ஆராயப்படாது எனவும், இதன் காரணமாக எவ்வித அச்சமும் இன்றி தங்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் பட்சத்தில் 34 அரச நிறுவனங்களின் ஊழியர்களை கொரோனா தொற்று ஒழிப்பிற்கு பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து அரச ஊழியர்களும் இதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட 200-க்கும் அதிகமான இலங்கை பிரஜைகள் இன்று நாடு திரும்பினர்.

நாடு திரும்பிய அனைத்து யாத்திரிகர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த 97 இலங்கையர்கள் சென்னையிலிருந்து நேற்று நாடு திரும்பினர்.

இவர்களில் 170 பேர் இரணைமடு இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இதுவரை வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் 22 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

Back to top button