தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி- விமான- ஆட்டிலறி தாக்குதல்களால் அதிர்கின்றது வடசிரியா
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன.
சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும்புகைமண்டலம் எழுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
துருக்கியின் விமானதாக்குதல் காரணமாக மிசராவா என்ற கிராமத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என எஸ்டிஎவ் அமைப்பு டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடபகுதியில் ஆயிரக்கணக்கான மக்களிற்கு நீரினை வழங்கும் அணைக்கட்டு ஒன்றினை இலக்குவைத்து துருக்கி படையினர் ஆட்டிலரி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் எஸ்டிஎவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிக்காரா என்ற கிராமத்தில் துருக்கியின் தாக்குதல் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துருக்கியின் தாக்குதலை தொடர்ந்து வடசிரியாவில் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சிஎன்என் ஆயிரக்கணக்கில் மக்கள் தப்பியோடிக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
தப்பியோடும் மக்களால் வீதிகள் மூச்சுதிணறுகின்றன,மோட்டார் சைக்கிள்களில் ஆறு ஏழு பேரை காணமுடிகின்றது,கார்களில் மெத்தைகள் உட்பட பல பொருட்களை அடுக்கியவாறு மக்கள் வெளியேறுகின்றனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் இருந்து கரும்புகைமண்டலம் எழுவதை காணமுடிகின்றது எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஆறு பகுதிகளில் விமானதாக்குதல்களும் ஆட்டிலறி தாக்குதல்களும் ஆரம்பித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.