ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று நிழல் இல்லாத நாள்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
இந்து தமிழ்: ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று நிழல் இல்லாத நாள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (Zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.
அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிழல் இல்லாத நாளாக இது நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 29), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றுகிறது. சரியாக நண்பகல் 12.14 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது,” என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி: விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
மும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
“மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அப்போது வீதிகளிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மும்பை கிங்சர்க்கிள் பகுதியில் நிறுவப்படும் விநாயகர் சிலை பணக்கார விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுமார் 90 கிலோ தங்கம், வெள்ளி, வைரநகைகளில் ஜொலிக்கும் இந்த விநாயகரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த விநாயகர் சிலைக்கு 266 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. நகைகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வளவு பெருந்தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது,” என்று அந்த செய்தி கூறுகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புதிய சிறப்பு
நீண்ட கால கோரிக்கைக்குப் பிறகு திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைகள் ஆகியவை சுமார் 150 ஆண்டு கால பழமை உடையவை.
ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவை உற்பத்தியாகும் ஊர்களால் சிறப்பு பெற்றிருந்தால் புவிசார் குறியீடு வழங்கப்படும். இது அப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும்.