செய்திகள்

நாளை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படவில்லை – இராணுவத்தளபதி

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்படுகின்றதே தவிர , முற்றாக நீக்கப்படவில்லை.

எனவே போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ள நேரத்தில் மருந்தகங்கள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் , அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மக்கள் தமக்கு தேவையான மருந்துகள் , உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

இதன் போது மேற்கூறியவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

அத்தோடு எந்தவொரு தேவைக்காகவும் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். 

மேலும் இந்த காலப்பகுதியில் மதுபானசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையற்ற விற்பனை நிலையங்கள் திறக்கப்படக் கூடாது.

நாளை செவ்வாய்கிழமை இரவு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் வார இறுதி நாட்களான 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் இதனை நீடிக்க வேண்டிய தேவை ஏற்படுமா என்பது குறித்து 27 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றார்.

Back to top button