செய்திகள்

நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது ! மக்களுக்கு அவசர அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது ! மக்களுக்கு அவசர அறிவிப்பு 1
இதனுடன் கட்டான – கட்டுவாபிட்டிய பகுதியில் ஆறு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல காவல்துறை அதிகாரிகளும் இணைந்து கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, வெடிப்பொருட்களுடனான பாரவூர்தி, வேன் ரக வாகனம் மற்றும் ஐந்து உந்துருளிகள் தொடர்பான தகவல்களை கொழும்பு மாவட்டத்திலுள்ள சகல காவற்துறை நிலையங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, குண்டுகள் பொருத்தப்பட்ட அலுமினிய தகரங்களினால் மூடப்பட்ட பாரவூர்தி மற்றும் சிறிய வேன் ரக வாகனம் என்பன கொழும்பு நகருக்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வு பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக காவற்துறையினர் நேற்று வெளியிட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக நுழைவாயில் பகுதியில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டை உலக வர்த்தக மையம், மத்திய வங்கி கட்டடம் உள்ளிட்ட பல இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தின் கொமாண்டோ படையணி, காவற்துறை விஷேட அதிரடிப்படை உள்ளிட்ட முப்படையினர் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில், பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்களை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 0112 43 42 51 அல்லது 011 40 55 105 அல்லது 011 40 55 106 முதலான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழப்பு பிரிவை தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது ! மக்களுக்கு அவசர அறிவிப்பு 2


Back to top button