செய்திகள்

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கடை கண்டுபிடிப்பு

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு 1
2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிருந்த ஓவியங்கள் அழியாமல் உள்ளன.

பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட இருக்கிறார்கள். இந்த துரித உணவகம் சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அழிந்துவிட்டது.

‘டெர்மோபோலியம்’ என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு வகைகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு, ‘ஃப்ரெஸ்கோஸ்’ என்றழைக்கப்படும், ஈரமான சுண்ணாம்புக் கல் மீது வரையப்படும் ஒரு வகையான ஓவியங்கள் மற்றும் சுடுமண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டிசம்பர் 26, சனிக்கிழமை அன்றுதான் அந்தப் பொருட்களை வெளிக்காட்டினார்கள்.

கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது.

எரிமலைக் குழம்பில் மூழ்கிப் போன பாம்பேய் நகரம் ஓர் அடர்த்தியான சாம்பல் அடுக்கால் மூடப்பட்டது. இந்த சாம்பல் அடுக்குதான் பல காலமாக இந்த நகரத்தை பாதுகாத்தது. எனவே இந்த பாம்பேய் நகரம் அகழ்வாராய்ச்சிக்கு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஓவியத்தில் காணப்படும் படங்கள், இந்த துரித உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

A fresco depicting two ducks and a rooster
படக்குறிப்பு,கோழி மற்றும் வாத்து இறைச்சி உணவுகள் இங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம்

பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமான ஒன்று. முதல் முறையாக ஒரு முழு டெர்மோபோலியத்தை நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்து வெளிகொண்டுவந்துள்ளோம் என, பாம்பேய் அகழ்வாராய்ச்சிப் பூங்காவின் இயக்குநர் மசிமோ ஒசானா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

நேபிள்ஸ் நகரத்தில் இருந்து, தென் கிழக்குப் பகுதியில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் பாம்பேய் அகழ்வாராய்ச்சிப் பகுதி இருக்கிறது. இந்தப் பகுதி தற்போது கொரோனா தொற்றால் மூடப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் திருநாள் பண்டிகைக்குள் மீண்டும் இந்த பூங்கா திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடக்கும் பாம்பேய் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி, இன்னும் ஆராய்ச்சி செய்யப்படாமல் இருக்கிறது. இந்த பகுதியை ஆராய்ச்சி செய்யச்செய்ய புதிய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

கடந்த மாதம் கூட, பாம்பேய் தொல்பொருள் ஆய்வில் எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Source
BBC Tamil
Back to top button