செய்திகள்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஐயன் “சாமியே சரணம் ஐயப்பா”

சிவ விஷ்ணுவின் மைந்தனாக பிறந்த ஐயப்பசுவாமி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். தனது பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து அற்புத அருள் பல புரிகின்றார். பந்தள தேசத்தின் மன்னரின் வளர்ப்பு மகனே மணிகண்டன். இவர் தனது 12ஆவது வயதிலேயே வேத சாஸ்திரங்கள், புராணங்கள், வில், வாள்வித்தை, கம்புசிலம்பம் ஆகியவற்றில் மாவீரனாய் திகழ்ந்தார். அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையே மகிஷி. அவளை அழிக்கவே ஐயப்பன் தோன்றினார். மகிஷாசுரனின் வதத்திற்கு காரணமான தேவர்களையும் ரிஷிகளையும் பழி வாங்கவே பிரம்மதேவனை வேண்டி கடும் தவம் மேற்கொண்டாள். அவள் தவத்திற்கு பிரம்மதேவன் மனமிரங்கி அவள் முன் தோன்றினார். பிரம்மதேவனை நோக்கி தனக்கு, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் மாத்திரமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரத்தை பெற்றுக்கொண்டாள். அவள் கேட்டுப் பெற்றுக்கொண்ட அந்த வரத்தின் பலனே ஸ்ரீ
ஹரிஹரசுதனாக ஐயப்பசுவாமி தோன்றினார். 
வரத்தை பெற்றுக்கொண்ட மகிஷியோ பூலோகத்தில் தர்மத்தை அழித்து அதர்மத்தையும் பல அட்டூழியங்களையும் செய்து வந்தாள். தனது அவதாரத்தின் நோக்கமான மகிஷியை அழித்து சுவாமி தர்மத்தை நிலைநாட்டினார். வருடாவருடம் ஐயப்ப பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். காரணம் அரக்கியை வதம் செய்தபோது ஓர் அழகான பெண் தோன்றினாள். அவள் சுவாமி ஐயப்பனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வேண்டினாள். அதற்கு தான் பிரம்மச்சாரி என்றும் தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் சுவாமி கூறினார். அவள் வற்புறுத்தினாள். அதற்கு சுவாமி ஓர் உபாயம் கூறினார். வருடாவருடம் என்னை தரிசிக்க கன்னி ஐயப்பசுவாமிகள் வராமலிருந்தால் அந்த சமயத்தில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். புதிதாகப் செல்லும் ஐயப்ப சுவாமிகள் “சரம்குத்தி” என்ற இடத்தில் சரம் குத்த வேண்டும். அந்தப் பெண் ஒவ்வொரு வருடமும் சரம்குத்தி இடத்தை வந்து பார்ப்பாள். அச்சமயம் கன்னிசுவாமிகளின் சரத்தை கண்டு ஏமாற்றத்தோடு
திரும்பிவிடுவாள். அவளே இன்று வரையும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்திருக்கிறாள். 
கார்த்திகை முதல் நாள் அன்று அதிகாலையிலே குளித்துவிட்டு கோயிலிலோ
அல்லது வீட்டிலிலோ குருசுவாமி மூலமாகவோ அல்லது தாய், தந்தை மூலமாகவோ மாலையணிய வேண்டும். 
ஸ்ரீ சபரிகிரிவாசனை வேண்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் விரத விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். விரதத்தில் கொஞ்சம் கூட தவறக்கூடாது. தவறி விட்டால் புண்ணியமும் உங்கள் கணக்கில் வராது.இது சான்றோர் வாக்கு. ஆணவம்,கன்மம், மாயை என்ற அழுக்கை நீக்க வேண்டுமென்றால் விரதம் இருக்கவேண்டும். அது வரையிலும் நடத்திய ஆடம்பர வாழ்க்கையை அகற்ற வேண்டும், எளிய உடை உடுத்த வேண்டும், எளிய உணவுகளை உண்ண வேண்டும், காலில் செருப்பு அணியாமல் நடக்க வேண்டும், அதனால் மாலை போட்ட பிறகு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு மறந்து அனைவரையும் சுவாமி என்று அழைக்க வேண்டும். இந்நிலையில் சமநிலை ஏற்படுவதைப் பார்க்கின்றோம். விரத காலத்தில் கறுப்பு உடை அணிவதே வழக்கம். துறவு உணர்வை மேம்படுத்த இது உதவும். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தைப் போக்கி ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தும். விரதம் இல்லாதவர்கள் நம்மை
எதிர்ப்படும்போது நம்மை அடையாளம் கண்டு பக்தியோடு பழக வழிசெய்யும். மலைப்பகுதியில் பயணம் செய்வதால் காட்டு விலங்குகள் இந்த உடைகளைக் கண்டு விலகி போகுமாம். விரத
காலத்தில் ஐம்புலன்களையும் அடக்கும் அனுபவத்தை பெற வேண்டும். இல்லத்தில் இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் இருக்க உருத்திராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து
கொள்வது அதற்காகத்தான். இவை துறவு உணர்வை ஏற்படுத்தி புலனடக்கத்திற்கு உதவி செய்யும். தினமும் இருமுறை குளித்து பூஜை செய்து கூட்டத்தோடு அமர்ந்து சரணகோஷ்ஷ மிடுகின்ற போது உள்ளம் தூய்மை பெறுகிறது. இறை நாட்டம் ஏற்படுகிறது. மாயை உணர்ச்சி மறைகின்றது. உண்மை ஒளிரத் தொடங்குகிறது, ஐயப்பன் தனது அவதார நோக்கமான மகிஷியை வதம் செய்த பிறகு தன் நைஸ்டிக பிரம்மச்சார்யாக (உச்சக்கட்ட பிரம்மச்சார்யம்) தவம் செய்ய சென்ற இடம் தான் சபரிமலை. சபரிமலை மிகவும் சக்திவாய்ந்த ஒரு திருத்தலம். இது ஒரு தாந்திரிகள் கோயில். இங்கு பூஜை செய்பவரை தாந்திரிகள் என அழைப்பர். இவர்கள் அதிக முத்திரைகளை பயன்படுத்துவர். அதாவது அதிகம் அறிவியலை பின்பற்றும் ஒரு கோயில். மற்ற கோயில்கள் போல் இது வருடம் முழுக்க இயங்காது. தமிழ் மாதம் முதல் 5 நாள் மற்றும் கார்த்திகை  மாதம் முதல் தை மாதம் வரை நடைதிறக்கப்படும், இந்நாட்களில் அனைவரும் சாதாரணமாக சென்றுவிட முடியாது. 48 நாட்கள் விரத விதிமுறைகளை பின்பற்றியே செல்ல வேண்டும். 48நாள் விரத விதிமுறைகளை குருசுவாமியிடம் கேட்டு தெரிந்து கொண்டு விரதத்தை பின்பற்ற வேண்டும். ஐயன் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவர் எம்மை கண்காணித்து கொண்டே இருப்பார். கேட்டதை அள்ளி கொடுக்கும் “கேரளத்து வாசனாக” நினைத்ததை தருவார். திலிமலை வாசனாக அமர்ந்திருக்கும் என் குல தெய்வமே, “சரணம் ஐயப்பா…”

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஐயன் "சாமியே சரணம் ஐயப்பா" 1

Back to top button