செய்திகள்
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா நேற்று 13.11.2018 மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று பிற்பகல் 4.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் தகர் (ஆட்டுக்கடா) வாகனத்தில் ஏறி சங்காரத்திற்குப் புறப்பட்டார். நல்லூரில் வாழும் செங்குந்த மரபினர் முருகப் பெருமானுடைய நவவீரர்களாகத் தம்மை அலங்கரித்து போர்க்களத்தில் பங்கேற்றனர்.
ஆலய முகப்பு வாயிலில் தாரகன் போரும் தெற்கு வீதியில் இருந்து மேற்கு வீதி வரை சிங்கமுகாசுரன் போரும் வடக்கு வீதியில் சூரன் போரும் இடம்பெற்றன.
ஆலயத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் வாயிலில் மாமரமாக வந்த சூரனை முருகனுடைய வேல் பிளப்பதாகப் பாவனை செய்யப்பட்டது. சூரன் மயிலாகவும் சேவலாகவும் மாறி நல்லறிவு பெற்றான். மயிலை வாகனமாக்கியும் சேவலைக் கொடியாக்கியும் முருகப் பெருமான நல்லருள் புரிந்தார். தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்ற கந்தபுராண வாக்கை நினைத்து அனைவரும் வழிபட்டனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்