செய்திகள்
உலகத்தில் ஈழத்தமிழச்சிக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் தட்டிய அவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இதன்படி இவருக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு, மற்றும் சமூக கலாசார புவியியல் பாடத்தினைக் கற்பிக்கும் நிலையில் அவருக்கான இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி இந்த பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை யசோதையின் இந்த வெற்றியானது அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதலாவதாக ஐம்பது இடங்களுக்குள்ளும் தற்பொழுது பத்து இடங்களுக்குள்ளும் யசோதை முன்னேறியமை அளப்பெரும் சாதனை என அந்த ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கொடுமையிலிருந்து மீண்ட யசோதையின் குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது.
அங்கு மிகவும் கடினமான சவால்களை எதிர்கொண்ட யசோதை கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டதுடன் அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுக்கு நல்ல கல்வியினைப் போதிக்கவேண்டும் என திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
ரூட்டி ஹில் உயர் நிலைக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும் புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் உள்லூர் பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூட்டி ஹில் கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
இந்த நிலையில் உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக தெரிவாகிய ஈழத் தமிழச்சியான யசோதை செல்வகுமாரனுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் நாளன்று இந்த சாதனைக்கான பரிசுத்தொகை டுபாயில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.