செய்திகள்

சப்த விடங்க தலங்கள்

Image result for lord shivaதமிழ்நாட்டில் 7 சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் பார்க்கலாம்.

* திருவாரூர் – வீதி விடங்கர் – அசபா நடனம்

* திருநள்ளாறு – நகர விடங்கர் – உத்மத்த நடனம்

* திருநாகைக்காரோகணம் – சுந்தர விடங்கர் – வீசி நடனம்

* திருக்காறாயில் – ஆதி விடங்கர் – குக்குட நடனம்

* திருக்குவளை – அவனி விடங்கர் – பிருங்க நடனம்

* திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்

* திருமறைக்காடு – புவன விடங்கர் – அம்சபாத நடனம்

பஞ்சகோதர தலங்கள்

இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்கது கேதார்நாத் திருத்தலம். இந்த ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சிவபெருமானின் உடலில் உள்ள ஐந்து பாகங்களாக குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சிவபெருமானின் இடுப்பு தான் கேதார்நாத் என்று சொல்லப்படுகிறது. துங்கநாத் என்ற திருத்தலம் சிவபெருமானின் தோள் பகுதி என்றும், ருத்ரநாத் ஈசனின் முகம் என்றும், மத் மகேஸ்வரர் கோவில் சிவனின் நாபி (தொப்புள்) எனவும், கல்பேஸ்வரர் ஆலயம் சிவ பெருமானின் திருமுடியாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.திரி லிங்க தேசம்

ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும். அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன. இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.

சிவபெருமானின் காதணிகள்

சிவபெருமான் புலித் தோல் ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து அருள்பாலிப்பவர். அவர் பொன் நகைகளால் அலங்காரம் செய்யப்படாதவர். இருப்பினும் அவர் தன்னுடைய உடலில் நிறைய அணிகலன்களை அணிந்திருக்கிறார் என்று, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலை ஆகிய 7 அணிகலன்களை சிவபெருமான் அணிந்திருப்பதாக தேவாரப் பாடல்கள் சொல்கின்றன.தேவர்கள் வழிபட்ட லிங்கம்

தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். அவரும் பற்பல சாந்தியங்களுடன் கூடிய சிவலிங்கங்களை அவர்களுக்கு செய்து கொடுத்தார். அதைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தேவர்கள் அனைவரும் பயனடைந்தனர். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திரன் – பதுமராக லிங்கம்
அசுவினி தேவர்கள் – மண்ணால் ஆன லிங்கம்
எமதர்மன் – கோமேதக லிங்கம்
சந்திரன் – முத்து லிங்கம்
பிரம்மன் – சொர்ண லிங்கம்
வருணன் – நீல லிங்கம்
வாயுதேவன் – பித்தளை லிங்கம்
விஷ்ணு – இந்திர லிங்கம்
நாகர்கள் – பவள லிங்கம்
ருத்திரர்கள் – திருவெண்ணீற்று லிங்கம்
குபேரன் – சொர்ண லிங்கம்
மகாலட்சுமி – நெய்யால் ஆன லிங்கம்
 
மனிதனின் சுவாசம் இறைவன்

மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுகிறான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 900 முறை மூச்சு விடுகிறான். அந்த கணக்குப்படி பார்த்தால், மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 முறை மூச்சு விடுகிறான். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாக இருக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், அம்பலத்தின் மேல் கூரை பொன்னால் வேயப்பட்டது. அதில் பல ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும். அதே போல் திருப் பெருந்துறை என்ற ஊரில் உள்ள ஆலயத்திற்கு ஆத்மலிங்கம் என்று பெயர். இந்த ஆலயத்தின் விமானத்திலும் கூட ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். இந்த இரண்டு ஆலயங்களிலும் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 21 ஆயிரத்து 600.

சிவனின் முகமும், ஐந்து கங்கையும்

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. நான்கு திசைகளை நோக்கி நான்கு முகங்களும், ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கியும் அமைந்திருக்கும். தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், ஈசானம் ஆகியவையே அந்த ஐந்து முகங்களாகும். இந்த ஐந்து முகங்களில், ஒவ்வொன்றில் இருந்தும் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உற்பத்தியான ஐந்து கங்கைகளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருப்பதாக சிவபுராணம் சொல்கிறது. இந்த கங்கைகளை மொத்தமாக ‘சிவ அமுதசாகரம்’ என்பார்கள்.

சிவபெருமானின் கிழக்கு முகத்தில் இருந்து ரத்தின கங்கையும், மேற்கு முகத்தில் இருந்து தேவ கங்கையும், வடக்கு முகத்தில் இருந்து கயிலாய கங்கையும், தெற்கு முகத்தில் இருந்து உக்கிர கங்கையும், மேல் நோக்கிய முகத்தில் இருந்து பிரம்ம கங்கையும் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது.

Back to top button