செய்திகள்

”அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல”: ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திக்கு எதிர்ப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் பல, குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல என வரைவு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு புதிய பரிந்துரை வரைவு ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்றை மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்தது.
இந்தப் புதிய வரைவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர், விரும்பாத மாநிலங்களின் மீது இந்தி திணிக்கப்படாது என உறுதியளித்தனர்.
முன்னதாக வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் ஆறாம் கிரேடிற்குப் பிறகு இந்தி பேசும் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி அல்லாத பிற பிராந்திய மொழிகளில் ஒன்றை படிப்பார்கள் என்றும் இந்தி பேசா மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் தங்கள் தாய்மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றைப் படிப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்திக்கு எதிர்ப்புபடத்தின் காப்புரிமைFRÉDÉRIC SOLTAN

இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தி படிப்பது கட்டாயம் என்று புதிய கல்விக் கொள்கை வரைவு கூறியது. தமிழ்நாட்டில் தற்போது தாய்மொழியான தமிழ், ஆங்கிலம் ஆகியவை மட்டுமே கற்பிக்கப்படும் வகையிலான இருமொழிக் கொள்கை இருப்பதால், புதிய கல்விக் கொள்கை வரைவிற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மாற்றம் செய்து புதிய வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 அல்லது 7ஆம் கிரேடில் படிக்கும் மாணவர்கள் மூன்று மொழிகளைத் தேர்வுசெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த இந்தி என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை சமூகவலைதளங்களில் பலரும் வரவேற்றிருந்தாலும் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், புதிய கல்வி வரைவு மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக சில கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Asiriyar K Veeramaniபடத்தின் காப்புரிமைASIRIYAR K VEERAMANI

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அரசின் சார்பில் இருமொழிக் கொள்கை என்ற (Bilingual) ஆட்சியின் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு – அதாவது மும்மொழித் திட்டம் ஏற்புடைத்தல்ல – தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று அறிவிக்கப்பட்டு விட்டது. மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, இந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப்போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும் இந்தியே மூன்றாவது மொழியாக இருக்கலாம் என்று பலரும் விரும்புகிறார்கள் என்று சாக்குப் போக்கு – தந்திரங்கள் செய்து வெளி வாசல் வழியாக நுழைக்கப்பட முடியாத இந்தியை – சமஸ்கிருதத்தை – கொல்லைப்புற வழியாக நுழைப்பதற்கு இது ஒரு தந்திர சூழ்ச்சி முன்னோட்ட முயற்சியேயாகும்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்த சர்ச்சை வெடித்தபோது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் எனக் கூறியிருந்தார். இதற்குப் பிறகு தமிழக அரசுத் தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
“புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் கல்விக் கொள்கையுமே குழப்பமாகத்தான் இருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி அரசியல் சாஸனத்தின் 9வது பட்டியலில் இணைத்தோமோ, அதேபோல இரு மொழிக் கொள்கை என்பதையும் ஒன்பதாவது பட்டியலில் இணைக்க வேண்டும். அதுதான் இப்போதைக்குத் தீர்வாக இருக்க முடியும்” என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி. செந்தில்நாதன்.

ஏ.ஆர்.ரஹ்மான்படத்தின் காப்புரிமைGARETH CATTERMOLE

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து, ”அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு” என ஒரு ட்வீட் பதிந்துள்ளார்.
”புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவுக்காகத் தான் கஸ்தூரிரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. அமைச்சகத்துக்கு அக்கமிட்டியின் அறிக்கை கிடைத்திருக்கிறது. இது இன்னும் அரசின் கொள்கையாக அறிவிக்கப்படவில்லை. எந்தவொரு மொழியும் எந்தவொரு மாநிலத்திலும் திணிக்கப்படாது” என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் போக்ரியல் நிஷாக் கடந்த சனிக்கிழமையன்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

Back to top button