செய்திகள்

தமிழ் மொழியில் வெளிநாட்டு விமானங்களில் அறிவிப்பு உள்ளது – இந்தியாவில் ஏன் இல்லை?

Source : https://www.bbc.com/tamil/arts-and-culture-47480549

விமானம்

மோதி கூறியதென்ன?

தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்திறங்கும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழில் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறோம் என்று இந்திய பிரதமர் மோதி நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தில் அறிவித்தார்.
பலர் இதனை வரவேற்று தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், அதே நேரம் பல நாடுகளில், ஏற்கனவே விமானங்களில் உள் அறிவிப்புகள் தமிழில் உள்ளதாக கூறுகின்றனர்.
சுவீடனில் ஆராய்ச்சியாளராக இருக்கும் செயற்பாட்டாளர் விஜய் அசோகன், “சென்னையிலிருந்து புறப்படும் லூஃப்தான்சா, எதியெட், எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமானங்களில் அறிவிப்புகள் முன்பே தமிழில்தான் இருக்கின்றன. இதில் விசித்திரம் என்னவென்றால் வெளிநாடு விமானங்கள் தமிழில் அறிவிக்க, இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை,” என்கிறார்.
விஜய் அசோகன் தன் பணி நிமித்தமாக தொடர்ந்து பல நாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பவர்.
“சுவீடனிலிருந்து டென்மார்க் செல்லும் விமானத்தில் அறிவிப்புகள் சுவீடன், டென்மார்க் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இருக்கும். ஆனால், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானத்தில் இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் இதுநாள் வரை இருந்து வருகிறது,” என்கிறார்.
இது மொழி சார்ந்தது மட்டுமல்ல, பாதுகாப்பு சார்ந்ததும் கூட என்கிறார் விஜய்.
இது தொடர்பாக விளக்கும் அவர், “பாதுகாப்பு தொடர்பாக விளக்கங்களை விமானத்தில் கொடுப்பார்கள். அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் இருந்து வருகிறது. இந்த இரு மொழி தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் எல்லாம் விமானத்தில் ஏறாதீர்கள் என்று மறைமுகமாக ஏளனம் செய்வது இது,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் விஜய்.

மோதி

விமானங்களில் அறிவிப்புகளை தமிழில் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறோமென்றார் மோதி. யோசிக்க மட்டும் செய்யாமல் உடனே செயல்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார் விஜய்

மொழி ஏகாதிபத்தியம்

இதே கருத்தை முன்வைக்கிறார் ஆழி செந்தில்நாதன், “பிரிட்டன், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல நாடுகளில் விமானங்களில் உள் அறிவிப்புகள் தமிழில்தான் செய்யப்படுகின்றன. தமிழ் மக்கள் வாழும் நாட்டில் இது குறித்து யோசிக்கவே இத்தனை ஆண்டுகளாக ஆகி இருக்கிறது. இது மொழி ஏகாதிபத்தியம் அன்றி வேறல்ல,” என்கிறார் அவர்.

அண்ணா பெயர் எங்கு சென்றது?

சென்னை சர்வதேச விமான முனையத்திற்கு அண்ணா பெயர் இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டு இருக்கிறது. இது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார் ஆழி செந்தில்நாதன்.
2017ஆம் ஆண்டு விமான போக்குவரத்துத் துறை ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பெயர்களில் உள்ள தலைவர்களின் பெயரை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. அதன்படி சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்த அண்ணா பெயர் நீக்கப்பட்டுள்ளது என்கிறார் செந்தில்நாதன்.

சென்னைபடத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

பெயர் மாற்றம் முடிவு எப்போது எடுக்கப்பட்டது?

வெளிநாட்டு பயணிகளுக்கு உள்ளூர் வரலாறு தெரியாது. பயணிகளின் செளகர்யத்துக்காக விமான நிலையங்களின் பெயர் ஊரின் பெயரில் இருக்கவும், விமான முனையத்திற்கு தலைவர்கள் பெயரை வைக்கவும் முடிவெடுத்தோம் என்று 2016ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மத்திய அரசு ராஜ்ய சபாவில் கூறியதாக இந்தியா டுடே இணையம் கூறுகிறது.
ஆனால், இந்தியாவில் உள்ள மற்ற சர்வதேச விமான நிலையங்களில் தலைவர்களின் பெயர் அப்படியே உள்ளது. கொல்கத்தா விமான நிலையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே இருக்கிறது, அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிலேயே இருக்கிறது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் என்றே டெல்லி விமான நிலையம் அழைக்கப்படுகிறது, போர்ட் ப்ளையர் விமான நிலையத்திற்கு இன்றும் வீர சாவர்கர் விமான நிலையம் என்றே பெயர். ஆனால், அண்ணா பெயர் மட்டும் நீக்கப்பட்டது இன ஒதுக்கல் அரசியல் அன்றி வேறல்ல என்கிறார் ஆழி.

விமான நிலையம்

விமான நிலையம் என்ன சொல்கிறது?

இது குறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விஷ்ணு தாஸை தொடர்பு கொண்டு கேட்ட போது, “தற்போது சென்னை சர்வதேச விமான நிலையம் என்றுதான் அழைக்கப்படுகிறது,” என்றார்.
அண்ணா என்ற பெயர் நீக்கப்பட்டு விட்டதா என்று கேட்டதற்கு அது குறித்து தெரியவில்லை என்றும், சிறு குழப்பம் நிலவுவதாகவும், விமான நிலையத்தின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Back to top button