செய்திகள்

காமன் டின்சில்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி

காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.

யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர்.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழகத்தில் சேலம், பழனி வரை நீண்டுள்ளது கிழக்கு தொடர்ச்சி மலை. இங்குள்ள வனப்பகுதிகளில் காணப்படும் புதிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்திவருகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை கழகம் இணைந்து பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதியில், டின்சில் பட்டாம்பூச்சி இருப்பது முதல்முறையாக புகைப்பட ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மிகவும் அரிதானதாக கருதப்படும் டின்சில் பட்டாம்பூச்சி ஏற்காடு மலையில் சுமார் 1400 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது என்கிறார்கள்.

பிபிசி தமிழிடம் பேசிய சேலம் இயற்கை கழகத்தின் தலைவர் வ.கோகுல், மாணவர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 17 குழுக்கள் சேலம் வனப்பகுதியை ஆய்வு செய்தபோது டின்சில் பட்டாம்பூச்சி இருப்பதை கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

”பொதுவாக டின்சில் பட்டாம்பூச்சி, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்தான் தென்படும். சேலம் வனப்பகுதியில் இந்த பட்டாம்பூச்சி இருப்பதால், இங்குள்ள வனப்பகுதி வளமுடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நீலன்கள்(Blue family) குடும்பத்தைச் சேர்ந்த இந்த டின்சில் பட்டாம்பூச்சியின் மேல்புறம் நீலவண்ணமும், அடிப்பகுதி சாம்பல் நிறத்திலும் காணப்படும்,”என்றார்.

டின்சில் உள்ளிட்ட 136 பட்டாம்பூச்சிகள் சேலம் வனப்பகுதியில் இருப்பதாகவும், 214 பறவை இனங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் கோகுல்.

”மூன்று நாட்கள் நடத்திய ஆய்வில், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்து படங்கள் பதிவு செய்தோம். உள்ளூர்களில் உள்ள பூச்சிகள், பறவைகள் பற்றிய புத்தகங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறோம். இதுபோன்ற ஆய்வில் வெளியாகும் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டதால், ஞாயிற்றுக் கிழமைகளில் பறவைகளை உண்டிவில் கொண்டு அடிப்பதை நிறுத்திவிட்டு, பல குழந்தைகள் இந்த உயிரிகளை அடையாளம் கண்டுசொல்கிறார்கள் என்பது இந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கிறோம்,”என்கிறார் .

சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரியான பெரியசாமி பிபிசி தமிழிடம் பேசும்போது, சேலம் வனப்பகுதியில் விதவிதமான உயிரிகள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக டின்சில் உள்ளிட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன என்றார்.

”வனத்தில் உயிர் பன்முகத்தன்மை (Biodiversity) தேவை. பலவிதமான விலங்குகள், பூச்சிகள் இருந்ததால்தான் அந்த வனப்பகுதி வளமுடன் இருப்பதாக கருதப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தன மரங்களுக்காக கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, மரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வனவிலங்குகளுக்கு மாற்றப்பட்டது. புலி, யானை என பெரிய விலங்குகள் அதிகம் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அதிக கவனம் கிடைத்தது. தற்போது கிழக்கு தொடர்ச்சி மலையில் உயிர் பன்முகத்தன்மை இருப்பதால், இங்குள்ள வனப்பகுதிகளும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு ஆய்வுகள் மிகவும் பயன்தரும்,”என்கிறார்.

காமன் டின்சில் சேலத்தில் காணப்பட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என கேட்டபோது, ”இதுநாள் வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்ட ஓர் உயிரி முதல்முறையாக தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் தென்படுகிறது என்பதால், இங்குள்ள வனப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பதை உணர்த்தும் அடையாளமாக இந்த பட்டாம்பூச்சியை கருதலாம்.

சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்(protected areas) இல்லை. ஆனாலும் இதுபேன்ற புதிய உயிரிகள், பலவிதமான உயிரிகள் இருப்பதை தொடர்ந்து ஆதாரங்களுடன் பதிவு செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை சேலம் வனப்பகுதிகளுக்கும் கிடைக்கும். பாதுகாப்பிற்காக புதிய திட்டங்களை கொண்டுவர இந்த ஆய்வு உதவும்,” என்றார் பெரியசாமி.

Sources BBC Tamil

Back to top button