Coronavirus News: “நாங்க செத்தாலும் தமிழகத்தில்தான்” – இரானில் வாடும் தமிழக மீனவர்கள்
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Coronavirus), அதிவேகமாக பரவி ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிபோட்டுவிட்டது.
இரண்டே மாதங்களில் 2,800 பேர் உயிரிழப்பதற்கு காரணமான கொரோனா (Coronavirus) வைரஸின் தீவிரம் சீனாவில் குறைய தொடங்கியுள்ள நிலையில், இந்த நோய்த்தொற்றின் தாக்கம், உலகின் மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 56 நாடுகளில் கொரோனா வைரஸின் (Coronavirus) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சில நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ரஜினிகாந்த் – கமல் ஹாசன்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியா? – விரிவான தகவல்கள்
குறிப்பாக, சீனாவை அடுத்து தென் கொரியா மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ்(Coronavirus) பாதிப்பினால் இரானின் தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் தென் கொரியாவில் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
“செத்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்துதான்…”
தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழில் செய்து வரும் பலரும் உள்ளூரில் போதிய வருமானமும், பணிவாய்ப்பும் கிடைக்காத காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது தொழிலை மேற்கொள்ளும் வழக்கம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், பிழைப்பை தேடி இரான் சென்ற சுமார் 1,000 தமிழக மீனவர்கள் கொரோனா வைரஸ் (Coronavirus) அச்சத்தின் காரணமாக மீன்பிடித் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமலும், விமானப் போக்குவரத்து ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமலும் தவித்து அங்கேயே வருகின்றனர்.
இதுதொடர்பாக, இரானிலுள்ள லாவன் தீவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக படகிலேயே வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மீனவரான சகாய வில்சனிடம் பிபிசி தமிழ் பேசியது. “நாங்கள் இரான் கடற்பகுதியை மையமாக கொண்டு மீன்பிடித் தொழில் செய்து வந்தாலும், துபாய்தான் எங்களது முக்கிய சந்தை. நாங்கள் பிடிக்கும் மீன்களை துபாய்க்கு கொண்டுசென்று விற்றால்தான் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், கொரோனா வைரஸ் (Coronavirus) அச்சத்தின் காரணமாக துபாய்க்கு மீன்களை கொண்டுசென்று விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இரானியர்களுடன் ஒப்பிடும்போது தமிழக மீனவர்களின் உடல் வெப்பநிலை சற்றே அதிகமாக இருப்பதால், இதை கொரோனா வைரஸின் தொடக்க நிலையாக கருதி எங்களை துபாய்க்குள் சென்று சந்தைப்படுத்த அனுமதி மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார் வில்சன்.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் (Coronavirus) உயிரிழந்தோர் அதிகம் கொண்ட நாடாக இரான் உள்ளதால், இங்கு தொழிலை தொடரவும் முடியாமல், விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பவும் முடியாமல் தமிழக மீனவர்கள் செய்வதறியாது தவித்து வருவதாக அவர் மேலும் கூறுகிறார்.
“கடலில் பிடிக்கும் மீன்களை சந்தைப்படுத்த முடியாதது எங்களது வாழ்வாதாரத்தை பாதித்தாலும், கொரோனா வைரஸால் எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் எங்களை வாட்டி வருகிறது. உள்ளூரில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்ற முடியாத காரணத்தினால்தான் இங்கு ஆண்டுக்கு தொடர்ந்து பத்து மாதங்கள் வேலை செய்கிறோம். ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால், செத்தாலும் எங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரை பார்த்துவிட்டுதான் சாக வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரானில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் எங்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் தக்க நடவடிக்கை எடுத்து எங்களை இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும்” என்று கூறும் வில்சன் கடந்த ஐந்தாண்டுகளாக இரானில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் மீன்பிடித் தொழில் செய்வதற்கு தேவையான எரிபொருட்களை மானிய விலையில் வழங்குவதல், சர்வதேச கடற்பகுதியில் வேற்று நாட்டினர் மிகப் பெரிய படகுகளில் மீன்களை அள்ளிச் செல்வதை தடுத்தல், மீனவர்கள் நிலையான வருமானத்தை உறுதிசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இதுபோன்று தமிழக மீனவர்கள் வெளிநாடுகளுக்கு வந்து சிரமப்படுவதை விடுத்து உள்ளூரிலேயே தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று வில்சன் கூறுகிறார்.
“வெளியே செல்லவே அச்சமாக உள்ளது”
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடாக விளங்குகிறது தென் கொரியா. இங்கு இதுவரை தொற்று ஏற்பட்டுள்ள 2,300க்கும் மேற்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் அந்நாட்டின் தேகு என்ற நகரத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார் அங்கு கடந்த ஏழாண்டுகளாக வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த ராமன்.
“தென் கொரியாவின் நான்காவது மிகப் பெரிய நகரமாக விளங்கும் தேகுவில் சுமார் 25 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தொழில்துறைக்கும், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கும் பெயர்போன இந்த நகரத்தில் சுமார் 250 தமிழர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட தென் கொரிய நகரங்களில் ஒன்றாக தேகு உருவெடுத்துள்ளதால், இங்கு வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் அச்சத்தின் காரணமாக அடுத்தடுத்து தமிழகத்துக்கு திரும்பியுள்ளனர்” என்று கூறும் ராமன் தேகு பகுதியிலுள்ள யங்னம் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பவியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றுகிறார்.
தென் கொரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 2,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவிட்-19 வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தென் கொரிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று அவரிடம் கேட்டபோது, “மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஒரு மருந்து கூட கொடுக்கப்படமாட்டாது என்று இருந்து வந்த விதிமுறையை தென் கொரிய அரசாங்கம் தளர்த்தி உள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நாடெங்கும் வசிப்பவர்களுக்கு 3-4 குறுஞ்செய்திகளை அனுப்பி, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கொரோனா அறிகுறி காணப்படுபவர்கள் எளிதாக மருத்துவ உதவிகளை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின் பேரில் கிட்டத்தட்ட அனைத்து வகை நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. அதே போன்று, மாணவர்கள் வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் கல்வியை தொடரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறுகிறார்.
சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், சிலர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் சூழ்நிலையில் குடும்பத்துடன் தொடர்ந்து தென் கொரியாவிலேயே வசிப்பது எத்தகைய உணர்வை அளிக்கிறது ராமனிடம் கேட்டபோது, “கொரோனா குறித்த அச்ச உணர்வை விட அதனால் எங்களது இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் உண்டான மன அழுத்தமே பெரும் பிரச்சனையாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அச்சம் ஒரு தடையாக இருக்கும் நிலையில், வீட்டிற்குள்ளே பல நாட்களாக முடங்கி இருப்பது சோர்வை உண்டாக்குகிறது. தினசரி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வகை உணவுப்பொருட்களையும் குறைந்தது 15 நாட்களுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனினும், தென் கொரிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு தொடர்ந்து வசித்து வருகிறோம்” என்று அவர் கூறுகிறார்.
ரஜினிகாந்த் – கமல் ஹாசன்: 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியா? – விரிவான தகவல்கள்
Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.02.2020 )..!
Sources: BBC Tamil