செய்திகள்

மக்களே சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் ! மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் – சுகாதார பணிப்பாளர் – covid alert

இறுதி வாரத்தில் நாட்டில் 50 வீதத்தினால் அல்லது அதற்கு அதிகமான டெல்டா வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுவதாகவும், டெல்டா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் மரணங்களும் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க கடினமான மாற்று நடவடிகைகளை கையாள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளாந்த கொவிட் மரணங்களின் அதிகரிப்பை அடுத்து சுகாதார தரப்பினர் அடுத்த கட்டங்களில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் இங்கிலாந்து தொற்றான அல்பா வைரஸ் தொற்றுப்பரவிய காலத்தில் எம்மால் நிலைமைகளை கட்டுப்படுத்த முடிந்தது, எனினும் தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவுகின்றது. 

இதுவே கடந்த சில வாரங்களில் கொவிட் மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணமாகும். 

எதிர்காலத்தில் வேறு புதிய தொற்றுகள் ஏற்படலாம். எனவே முடிந்தளவு மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

மிக இலகுவான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம். 

இந்தியாவின் நிலைமையோ அல்லது இந்தோனேசியாவின் நிலைமையோ இலங்கையில் உள்ளதா காணப்படுவதாக கூற முடியாது.

இலங்கையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை, 50 வீதத்தினால் அல்லது அதற்கு அதிகமான வீத டெல்டா வைரஸ் பரவல் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 

மிக வேகமான வைரஸ் தொற்றும் நிலையொன்றே காணப்படுகின்றது. இதே நிலைமை ஏனைய நாடுகளிலும் காணப்பட்டது. 

இந்தியா, இந்தோனேசியா நாடுகளிலும் இதுவே நடந்தது. எனவே எமது நாட்டிலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

மரணங்களை தடுக்க கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது, சாதாரணமாக தடுப்பூசிகளை ஏற்றுவது மட்டுமே தீர்வு அல்ல. 

அதனையும் தாண்டி பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்போது வரையிலான தரவுகளில் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களே அதிகளவில் மரணித்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலான நபர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே 60 வயதிற்கு மேற்பட்ட சகலரும் விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இரண்டு  தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களில்  23 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 170 ற்கும் அண்ணளவான நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஏனைய சகலருமே ஒரு தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ளாதவர்கள் என்றார்.

Back to top button