செய்திகள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு

மேஷ ராசிக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்.


விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3 பாதங்கள் வரை)
துலாம் ராசி நேயர்களே,
விகாரி வருடம் தொடங்கும் பொழுது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரித்துத் தொடங்குகின்றது.
மேலும் சகாய ஸ்தானத்தில் சனி, கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. எனவே செய்யும் முயற்சிகளில் வெற்றியும், திடீர் முன்னேற்றமும் இந்த ஆண்டு ஏற்படப் போகின்றது. பாராட்டும், புகழும் கூடும். நோயிலிருந்து விடுதலை பெற்றுச் சுறுசுறுப்பாகப் பணிபுரியப் போகிறீர்கள்.
12-க்கு அதிபதியான புதன் 6-ம் இடத்தில் நீச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே விபரீத ராஜயோக அடிப்படையில் வசதி, வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் துணையோடு வந்த சச்சரவுகள் அகலும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
3-ல் கேது இருப்பதால் குலதெய்வ வழிபாடு கூடுதல் நன்மையை வழங்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களுக்காகவும் நீங்கள் தாராளமாகச் செலவிட முன்வரும் நேரமிது. சனி, கேது இரண்டும் குருவின் வீட்டிலேயே குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் கவுரவத்திற்கு ஏதும் குறைவு ஏற்படாது.
சுய ஜாதகத்தில் குருதிசை, குருபுத்தி மற்றும் கேதுதிசை, கேதுபுத்தி போன்றவைகள் நடைபெறுமேயானால் சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
பொதுவாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆவார். அதே நேரத்தில் சகாய ஸ்தானாதிபதியாக விளங்குபவர் வியாழன் ஆவார். இரண்டும் ஒன்றுக்கொன்று பகைக்கிரகம் என்பதால் சில நேரங்களில் உங்களுக்கு தடுமாற்றங்கள் வரலாம்.
பணியாட்களால் தொல்லைகளும், பணியிடத்தில் பிரச்சினைகளும் வரலாம். உதவிக்கரம் நீட்டுவதாகச்சொன்ன உறவினர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். எனவே ராகு-கேதுக்களுக்கு முறையான பிரீதிகளை யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரமாகச் செய்து கொள்வது நல்லது.
9-ல் ராகு சஞ்சரிப்பதால் தந்தை வழி உறவில் கொஞ்சம் நெருக்கம் ஏற்படும். இதுவரை உங்களை விட்டுவிலகியிருந்த பெற்றோர்கள் இப்போது வந்திணைய விருப்பப்படுவர். அவர்கள் தரும் பண மழையிலும், அவர்கள் காட்டும் பாசமழையிலும் நனையப் போகிறீர்கள்.
வெளிநாட்டு முயற்சி ஒருசிலருக்குக் கைகூடும். அதே நேரம் சனி, குரு மற்றும் பாம்புக்கிரகங்களின் திசாபுத்திகள் நடைபெறுமேயானால் குறுக்கீடு சக்திகள் வந்து சேரும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.20120 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை பெற்ற இடங்கள் எல்லாம் புனிதமடையும் அல்லவா?
குருவின் பார்வை பலனால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கல்யாண வயது வந்த பிள்ளைகளுக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்துக்கல்யாணம் செய்ய வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு இப்பொழுது பொருத்தமான ஜாதகங்கள் வந்து சேரும்.
வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்தால் வருமானம் கூடுதலாகக் கிடைக்குமே என்று நினைத்தவர் களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வரப்போகின்றது. அவர்கள் எதிர்பார்த்த வேலை இப்பொழுது கிடைக்கப்போகின்றது.
களத்திர தோஷத்தின் காரணமாக கணவன், மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் இப்பொழுது பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் களின் பூப்புனித நீராட்டு விழாக்கள், பிள்ளைகளின் காதுகுத்து விழாக்கள், பெற்றோர்களின் மணி விழாக்கள் போன்றவைகள் நடைபெறும் நேரமிது.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தைவழி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பங்காளிப்பகை மாறும்.
ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் சூழ்நிலை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் யோகம் உண்டு. செயல்திறனில் வெற்றி கிடைக்கும்.
வெளிநாட்டிலிருந்து வியக்கும் செய்தி வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னோர்கள் விட்டுச்சென்ற ஆலயத் திருப்பணிகளில் அதிக அக்கரை காட்டுவீர்கள். நீண்ட தூரப்பயணங்களால் நிம்மதி கிடைக்கும்.
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய திருப்பங்கள் பலவும் வந்து கொண்டேயிருக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் சூடு பிடிக்கும். பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். வெளிநாட்டில் தொடர்பு கொண்டு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு உன்னதமான நேரமிது.
மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்வீர்கள். அரசுவழி ஆதரவுகள் உண்டு. பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பிள்ளைகளை களத்தில் இறக்கி வெற்றி காண்பர்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயே உலா வருகின்றார். இதன் பலனாக மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு வரப்போகின்றது.
ஜீவன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தவர் களுக்கு அது கைகூடும். வீண்பழிகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும்.
அஷ்டம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். எதிரிகள் விலகி இனிய பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வருவதில் இருந்த தடைகள் அகலும். வீண் விரோதங்கள் விலகும். வழிவழியாக வந்த கடன் சுமையைக் குறைக்க புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வரவு, செலவுகளில் திருப்தி ஏற்படும். வீடு, இடம் வாங்குவதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.
சேமிப்பு அதிகரிக்கும். தேக்க நிலை மாறி ஆக்கநிலை உருவாகும். பணிகளில் இருந்த தொய்வு அகலும். திருப்பணிகளுக்கு கொடுத்துதவி மகிழ்வீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு வளர்ச்சியை மேலும் பெருக்கிக் கொள்வீர்கள்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது.
எனவே வாரிசுகள் பிறப்பதில் இருந்த தடைஅகல இப்பொழுது வாய்ப்பு உருவாகப் போகின்றது.
எனவே சுயஜாதக அடிப்படையில் புத்திர ஸ்தானம் பார்த்து அதற்குரிய ஸ்தல வழிபாடுகளை மேற்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களும் கைக்கு கிடைக்கும்.
பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணிஉயர்வு பற்றிய தகவலும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சனியின் வக்ர காலத்தில் தாயின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகின்றார்கள்.
புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரம் உச்சநிலையை அடையும். சகோதர வர்க்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்ததொகை வந்து சேரும். வீடு, நிலம் கிரயம் செய்யும் முயற்சி கை கூடும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் அதிக விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்ய வேண்டும். சுகக்கேடுகளும், வைத்தியச் செலவுகளும் வரலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பல பணிகள் பாதியில் நிற்கின்றதே என்று கவலைப்படுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத்தொடக்கம் மிக சிறப்பாக இருக்கின்றது. வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.
கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் வருமானமும் என்ற நிலைமை உருவாகி பொருளாதார நிலை உச்சம் அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு வெளியில் வந்து சுயதொழிலைச் செய்து கைநிறையச் சம்பாதிக்கும் வாய்ப்புக் கைகூடிவரும்.
பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தாயின் ஆதரவும், சகோதர வர்க்கத்தினர்களின் ஆதரவும் திருப்திகரமாக இருக்கும்.
மனக்குழப்பம் அகன்று தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் திருமணப்பேச்சுக்கள் கை கூடும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டால் வந்த பிரச்சினை முற்றிலும் மாறும். கடுமையாக முயற்சித்தும் சென்ற ஆண்டு நடைபெறாத சில காரியங்கள் இந்த ஆண்டு துரிதமாக நடைபெறும்.
ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்களால் வந்த தொல்லை அகலும். மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். குலதெய்வ வழிபாடும், ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு ஸ்தல வழிபாடும் அனுகூல நட்சத்திரமன்று செய்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் அஷ்டலட்சுமி கவசம் பாடி இல்லத்தில் லட்சுமி பூஜை செய்து வருவது நல்லது. பஞ்சமி திதியன்று வாராஹி வழிபாடு செய்தால், வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.
2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு 1
– Daily Thanthi

Back to top button