தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்
புகையிரதத் திணைக்களத்தில் கடந்த ஆறு வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்த வர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு புகையிரதத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கியுள்ளன.
உரிய காலப்பகுதியில் தீர்வு கிடைக்கப்பெறாவிடின் அடுத்த கட்டமாக வேலைநிறுத்தத்துக்குச் செல்ல தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் புகையிரதத் தொழிற் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.விதானகே கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் கடந்த ஆறு வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம் .
அதன் போது ஜனாதிபதி செயலகத்தில் எமது கோரிக்கையை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கலந்துரையாடலின் போது எமது பிரச்சினைக்குத் தீர்வும் எட்டப்படவில்லை. நேற்றைய தினம் (புதன்கிழமை) போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் உரிய உயர் அதிகாரிகளு டன் கலந்துரையாடலை மேற்கொண்டு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கான அனுமதி கிடைக்கப்பெற்ற தும் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் நிரந்தர தொழில் நியமனங்கள் வழங்கப்படாவிடின் தொழில் சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படும். அதற்கமைய அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்துக்கோ அல்லது வேலை நிறுத்தத்துக்கோ செல்லத் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.