செய்திகள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்கான பலன் பார்க்க இங்கே செய்யவும்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள்.


துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு


விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3 பாதங்கள் வரை)
துலாம் ராசி நேயர்களே,
விகாரி வருடம் தொடங்கும் பொழுது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரித்துத் தொடங்குகின்றது.
மேலும் சகாய ஸ்தானத்தில் சனி, கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. எனவே செய்யும் முயற்சிகளில் வெற்றியும், திடீர் முன்னேற்றமும் இந்த ஆண்டு ஏற்படப் போகின்றது. பாராட்டும், புகழும் கூடும். நோயிலிருந்து விடுதலை பெற்றுச் சுறுசுறுப்பாகப் பணிபுரியப் போகிறீர்கள்.
12-க்கு அதிபதியான புதன் 6-ம் இடத்தில் நீச்சம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே விபரீத ராஜயோக அடிப்படையில் வசதி, வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் துணையோடு வந்த சச்சரவுகள் அகலும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
3-ல் கேது இருப்பதால் குலதெய்வ வழிபாடு கூடுதல் நன்மையை வழங்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களுக்காகவும் நீங்கள் தாராளமாகச் செலவிட முன்வரும் நேரமிது. சனி, கேது இரண்டும் குருவின் வீட்டிலேயே குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் கவுரவத்திற்கு ஏதும் குறைவு ஏற்படாது.
சுய ஜாதகத்தில் குருதிசை, குருபுத்தி மற்றும் கேதுதிசை, கேதுபுத்தி போன்றவைகள் நடைபெறுமேயானால் சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
பொதுவாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆவார். அதே நேரத்தில் சகாய ஸ்தானாதிபதியாக விளங்குபவர் வியாழன் ஆவார். இரண்டும் ஒன்றுக்கொன்று பகைக்கிரகம் என்பதால் சில நேரங்களில் உங்களுக்கு தடுமாற்றங்கள் வரலாம்.
பணியாட்களால் தொல்லைகளும், பணியிடத்தில் பிரச்சினைகளும் வரலாம். உதவிக்கரம் நீட்டுவதாகச்சொன்ன உறவினர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். எனவே ராகு-கேதுக்களுக்கு முறையான பிரீதிகளை யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரமாகச் செய்து கொள்வது நல்லது.
9-ல் ராகு சஞ்சரிப்பதால் தந்தை வழி உறவில் கொஞ்சம் நெருக்கம் ஏற்படும். இதுவரை உங்களை விட்டுவிலகியிருந்த பெற்றோர்கள் இப்போது வந்திணைய விருப்பப்படுவர். அவர்கள் தரும் பண மழையிலும், அவர்கள் காட்டும் பாசமழையிலும் நனையப் போகிறீர்கள்.
வெளிநாட்டு முயற்சி ஒருசிலருக்குக் கைகூடும். அதே நேரம் சனி, குரு மற்றும் பாம்புக்கிரகங்களின் திசாபுத்திகள் நடைபெறுமேயானால் குறுக்கீடு சக்திகள் வந்து சேரும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.20120 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை பெற்ற இடங்கள் எல்லாம் புனிதமடையும் அல்லவா?
குருவின் பார்வை பலனால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கல்யாண வயது வந்த பிள்ளைகளுக்கு ஜாதகப்பொருத்தம் பார்த்துக்கல்யாணம் செய்ய வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு இப்பொழுது பொருத்தமான ஜாதகங்கள் வந்து சேரும்.
வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்தால் வருமானம் கூடுதலாகக் கிடைக்குமே என்று நினைத்தவர் களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வரப்போகின்றது. அவர்கள் எதிர்பார்த்த வேலை இப்பொழுது கிடைக்கப்போகின்றது.
களத்திர தோஷத்தின் காரணமாக கணவன், மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் இப்பொழுது பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் களின் பூப்புனித நீராட்டு விழாக்கள், பிள்ளைகளின் காதுகுத்து விழாக்கள், பெற்றோர்களின் மணி விழாக்கள் போன்றவைகள் நடைபெறும் நேரமிது.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தைவழி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பங்காளிப்பகை மாறும்.
ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் சூழ்நிலை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் யோகம் உண்டு. செயல்திறனில் வெற்றி கிடைக்கும்.
வெளிநாட்டிலிருந்து வியக்கும் செய்தி வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னோர்கள் விட்டுச்சென்ற ஆலயத் திருப்பணிகளில் அதிக அக்கரை காட்டுவீர்கள். நீண்ட தூரப்பயணங்களால் நிம்மதி கிடைக்கும்.
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய திருப்பங்கள் பலவும் வந்து கொண்டேயிருக்கும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் சூடு பிடிக்கும். பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். வெளிநாட்டில் தொடர்பு கொண்டு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு உன்னதமான நேரமிது.
மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்வீர்கள். அரசுவழி ஆதரவுகள் உண்டு. பொதுநலம் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பிள்ளைகளை களத்தில் இறக்கி வெற்றி காண்பர்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயே உலா வருகின்றார். இதன் பலனாக மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு வரப்போகின்றது.
ஜீவன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தவர் களுக்கு அது கைகூடும். வீண்பழிகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும்.
அஷ்டம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். எதிரிகள் விலகி இனிய பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வருவதில் இருந்த தடைகள் அகலும். வீண் விரோதங்கள் விலகும். வழிவழியாக வந்த கடன் சுமையைக் குறைக்க புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வரவு, செலவுகளில் திருப்தி ஏற்படும். வீடு, இடம் வாங்குவதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.
சேமிப்பு அதிகரிக்கும். தேக்க நிலை மாறி ஆக்கநிலை உருவாகும். பணிகளில் இருந்த தொய்வு அகலும். திருப்பணிகளுக்கு கொடுத்துதவி மகிழ்வீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு வளர்ச்சியை மேலும் பெருக்கிக் கொள்வீர்கள்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது.
எனவே வாரிசுகள் பிறப்பதில் இருந்த தடைஅகல இப்பொழுது வாய்ப்பு உருவாகப் போகின்றது.
எனவே சுயஜாதக அடிப்படையில் புத்திர ஸ்தானம் பார்த்து அதற்குரிய ஸ்தல வழிபாடுகளை மேற்கொண்டால் புத்திரப்பேறு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களும் கைக்கு கிடைக்கும்.
பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணிஉயர்வு பற்றிய தகவலும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சனியின் வக்ர காலத்தில் தாயின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகின்றார்கள்.
புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரம் உச்சநிலையை அடையும். சகோதர வர்க்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்ததொகை வந்து சேரும். வீடு, நிலம் கிரயம் செய்யும் முயற்சி கை கூடும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் அதிக விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்ய வேண்டும். சுகக்கேடுகளும், வைத்தியச் செலவுகளும் வரலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பல பணிகள் பாதியில் நிற்கின்றதே என்று கவலைப்படுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத்தொடக்கம் மிக சிறப்பாக இருக்கின்றது. வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.
கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் வருமானமும் என்ற நிலைமை உருவாகி பொருளாதார நிலை உச்சம் அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு வெளியில் வந்து சுயதொழிலைச் செய்து கைநிறையச் சம்பாதிக்கும் வாய்ப்புக் கைகூடிவரும்.
பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தாயின் ஆதரவும், சகோதர வர்க்கத்தினர்களின் ஆதரவும் திருப்திகரமாக இருக்கும்.
மனக்குழப்பம் அகன்று தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் திருமணப்பேச்சுக்கள் கை கூடும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டால் வந்த பிரச்சினை முற்றிலும் மாறும். கடுமையாக முயற்சித்தும் சென்ற ஆண்டு நடைபெறாத சில காரியங்கள் இந்த ஆண்டு துரிதமாக நடைபெறும்.
ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்களால் வந்த தொல்லை அகலும். மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். குலதெய்வ வழிபாடும், ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு ஸ்தல வழிபாடும் அனுகூல நட்சத்திரமன்று செய்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
வெள்ளிக்கிழமை தோறும் அஷ்டலட்சுமி கவசம் பாடி இல்லத்தில் லட்சுமி பூஜை செய்து வருவது நல்லது. பஞ்சமி திதியன்று வாராஹி வழிபாடு செய்தால், வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.


விருச்சிக ராசிக்காரர்களே! சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்!


விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)
விருச்சிக ராசி நேயர்களே,
விகாரி வருடம் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதே தனாதிபதி குரு தன ஸ்தானத்திலும், 9-ம் இடத்திற்கு அதிபதியான சந்திரன் தன் சொந்த வீடான 9-ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ஒளிமயமான எதிர்காலம் அமைய உத்திரவாதம் கிடைக்கப் போகின்றது.
வியக்கும் தகவல்களும், வெற்றி வாய்ப்புகளும் வீடு தேடி வரும் விதத்தில் கிரகநிலைகள் சாதகமாக விளங்குகின்றன.
தைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கும் விதத்தில் இந்த ஆண்டு தொடங்குகின்றது.
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இடமான 2-ம் இடத்தில் மாபெரும் கிரகங்களாக விளங்கும் குரு, சனி, கேது ஆகிய மூன்றும் சஞ்சரிக்கின்றார்கள்.
எனவே தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கும்.
ஏழரைச் சனியின் 2-வது சுற்று நடப்பவர்கள் பணமழையிலும், பாச மழையிலும் நனைவார்கள். முதல் சுற்று நடப்பவர்கள் மற்றும் மூன்றாவது சுற்று நடப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
ஆண்டின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிநவீன வாகனங்களை வாங்கி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பூமி வாங்குவது, வீடு கட்டுவது.
கட்டிய வீட்டை மராமத்து செய்வது வீட்டை விரிவுபடுத்துவது, புதிய கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவது, நடக்கும் தொழில் பங்குதாரர்களை மாற்றம் செய்வது போன்றவற்றை பரிசீலனை செய்து செயல்படுத்துவீர்கள்.
சகடயோகம் இருப்பதால் வரவும் செலவும் சமமாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தன ஸ்தானம் மிகமிக வலுவாக உள்ளது. எனவே உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தொழில் புரிபவர்கள் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பால் பொதுவாழ்வில் ஈர்க்கப்பட்டும் அதன் மூலமும் புகழ்குவிக்கப் போகிறீர்கள்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ‘ஆறினைக் குருதான் பார்த்தால் அடைந்திடும் கடன்கள் யாவும்’ என்பார்கள். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்பதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியந்து, நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்கலாம்.
எதிரிகள் விலகுவர். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக முடித்து புதிய பதவிகளைப்பெறும் சூழ்நிலை உண்டு.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச் செய்யவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதரத்தின் வழியே வந்த பகைமாறும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் இத்தனை நாட்கள் நீங்கள் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் இப் பொழுது கிடைக்கப் போகின்றது. ‘பத்தினை குருதான் பார்த்தால் முத்தான தொழில்கள் வாய்க்கும், முன்னேற்றம் அதிகரிக்கும்’ என்று முன்னோர்கள் சொல்வர். எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய தொழில் ஒன்றைத் தொடங்க முன்வருவீர்கள். வாடகை இடத்தில் தொழில் நடைபெறுமேயானால் அந்த இடத்தை விலைக்கு வாங்கலாமா? என்று ஒருசிலர் யோசிப்பர். இந்த யோசனைக்கு இப்பொழுது வெற்றி கிடைக்கும்.
வெளிநாட்டில் இருந்துகூட ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக அமையும். பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் பெரிய லாபம் வரலாம். உத்தியோக வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.
அதே நேரத்தில்அரசு பணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அழைப்புகள் வந்து ஆச்சரியப்பட வைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றி பெற வைக்கும் நேரமிது. தொடர்புகள் பல வழிகளிலும் வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைக்கும். வாரிசுகளுக்கும் வேலை கிடைக்கும். எனவே பொருளாதார நிலை உயர்ந்து புதிய திட்டங்கள் தீட்ட முன்வருவீர்கள்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குருபகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயும் உலா வருகின்றார். இதன் பயனாக மிகச்சிறந்த மாற்றங்கள் உங்களுக்கு வந்துசேரப்போகின்றது.
ஜென்ம குருவின் ஆதிக்ககாலத்தில் சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறப் போகிறீர்கள். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தன பஞ்சமாதிபதியாக குரு விளங்குவதால் அவர் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனதளவில் நினைத்தவற்றை மறு கணமே செய்து முடிப்பீர்கள்.
ஆற்றல் பளிச்சிடும். அருகில் இருப்பவர்களுக்குச் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் வெற்றிபெற்று உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.
இறைநம்பிக்கையால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்போடு கூடிய வரன்கள் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாரிசுகளின் வளர்ச்சி, பூர்வீக சொத்துக் களால் லாபம், தாய்வழி உறவு, புத்தி சாதுர்யம், முன்னோர் சொத்துக் களால் ஆதாயம், சுற்றமும் நட்பும் உதவுதல், விவாக வாழ்வில் மகிழ்ச்சி, வாகன யோகம், கடல் கடந்து செல்லும் வாய்ப்பு போன்றவற்றில் எல்லாம் நல்ல வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் இந்த குருபார்வை கொடுக்கப் போகின்றது.
உத்தியோகத்தில் உயர்பதவிகள், சம்பள உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச்சனியில் பாதச்சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். எனவே சனியின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும்.
ராசிப்படி சனி பகவான் சகாய ஸ்தானாதிபதியாவார். எனவே உங்களைப் பொறுத்தவரை சனியின் பார்வை சகாயங்களையும், நன்மைகளையுமே கொடுக்கும். எனவே ஆடை, ஆபரண சோக்கை, தங்கம், வெள்ளி போன்றவைகள் வாங்கும் யோகம், சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும் நிலை, அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், கல்வி முன்னேற்றம் ஆகியவை ஏற்படும் நேரமிது.
மேலும் வெளிநாட்டு முயற்சிகள் கூட அனுகூலம் தரலாம். சனியின் வக்ர காலத்தில் உடன்பிறப்புகளை கொஞ்சம் அனுசரித்துச்செல்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேதுவும், 8-ம் இடத்தில் ராகுவும் இருக்கின்றார்கள். சுயபலம் அற்ற கிரகம் என்று வர்ணிக்கப்படும் அந்தப் பாம்பு கிரகங்கள் இருக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியைப் பொறுத்தே பலன்களை வாரிவழங்கும். அந்த அடிப்படையில் கேது, குரு வீட்டில் இருப்பது யோகம் தான். மேலும் குருவோடும் இணைந்தும் சஞ்சரிக்கின்றார். குரு பார்த்தாலும் கோடி நன்மை, சேர்ந்தாலும் கோடி நன்மை, என்பர்.
குருபார்வை ராகுவின் மீது பதிகின்றது. எனவே இந்த ராகு கேதுக்களின் ஆதிக்கம் நன்மை தரும் விதத்திலேயே இருக்கின்றது. தொழிலில் முன்னேற்றம், பணவரவில் திருப்தி, குடும்பத்தில் குதூகலம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து போன்றவைகள் கிடைக்கும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கும்.
பயணங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுவந்தால் பற்றாக்குறை அகலும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. மண், பூமி சேர்க்கை, மக்கட்செல்வங்களின் கல்யாண வாய்ப்புகள், பொன், பொருள்களில் முதலீடு செய்யும் யோகம், பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் உருவாகும்.
கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டு உறவினர் களின் பாராட்டுக்களையும் பெறுமளவிற்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். கடக ராசியில் ஆண்டு பிறப்பதால் பெற்றோர்களின் ஆதரவு பெருமைப்படத்தக்கதாக அமையும்.
உற்றார், உறவினர்களும், உடன்பிறப்புகளும் உங்கள் முன்னேற்றத்தைக்கண்டு ஆச்சரியப் படுவர். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் சாதகமானநிலை நிலவும். குலதெய்வ வழிபாடும். தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் விநாயப் பெருமான் வழிபாடும், வியாழக் கிழமை அன்று குரு வழிபாடும் செய்வது நல்லது.
ராகு-கேதுக் களுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு, நாக கவசமும் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

தனுசு ராசிக்காரர்களே! ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்.

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை)
தனுசு ராசி நேயர்களே,
விகாரி வருடம் தொடங்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அவரோடு சனி மற்றும் கேது ஆகிய 2 கிரகங்களும் இணைந்திருக்கின்றார்கள்.
அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரித்து வருடத்தொடக்கம் ஆரம்பமாகின்றது. சப்தம ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார்.
எனவே எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகின்றது.
கோடிநலம் தரும் குரு பகவான் ஆரம்பத்தில் உங்கள் ராசியில் இருந்தாலும், பிறகு விருச்சிகத்திற்கு மாறிச் சென்று விடுகின்றார்.
விருச்சிகம் விரய ஸ்தானமாகும். எனவே விரயங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். முறையான பலனும், முன்னேற்றமும் ஐப்பசிக்கு மேல்தான் கிடைக்கும். அப்பொழுது குரு பகவான் மீண்டும் தனுசு ராசிக்குச் செல்கின்றார்.
ராசிநாதன் ராசியில் சஞ்சரிக்கும்பொழுது யோசிக்காது செய்த காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வருடத்தொடக்கத்தில் செவ்வாய் 6-ம் இடத்தில் இருப்பது யோகம் தான். 6-ல் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை 12-ம் இடத்தில் பதிகின்றது. 12-ம் இடம் செவ்வாய்க்குரிய வீடாகும். எனவே உடன்பிறப்புகளால் உங்களுக்கொரு நன்மை கிடைக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பது யோகம்தான்.
9-ம் இடத்திற்கு அதிபதி 5-ம் இடத்தில் உச்சம்பெறுவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவையெல்லாம் உங்களுக்கு சிறப்பாகக் கிடைக்கும். ஜென்ம கேது 7-ல் ராகு இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தொடங்கும் பொழுது ஏழரைச் சனியில் ஜென்மச்சனி தொடங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது.
எப்பொழுதுமே ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றால் நிம்மதி கிடைக்காது. நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகாது.
எல்லாவற்றிற்கும் வடிகாலாக நீங்கள் செய்த புண்ணியம் குரு பகவான் உங்கள் வீட்டிலேயே சஞ்சரிப்பது தான். அதுமட்டுமல்லாமல் குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது.
சனி உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். இரண்டாமிடம் என்பது தன ஸ்தானமாகும். 3-ம் இடம் என்பது சகாய ஸ்தானாமாகும்.
அப்படிப்பட்ட ஆதிபத்யங்களைப் பெற்ற சனிபகவான் ஏழரைச்சனியில் 2-வது சுற்றாக வருவபர்களுக்கு எந்தத் தீமையும் ஏற்டாது. முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடந்தால் கூடுதல் கவனம் தேவை.
குறிப்பாக விரயங்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப ரகசியங்களை 3-ம் நபரிடம் சொல்வதன் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் முன் ஒருகணம் யோசித்து செயல்படுவதுதான் நல்லது.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. சொந்த வீட்டில் சஞ்சரித்து குரு பார்க்கும் பொழுது வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும். தடைகற்கள் படிக்கற்களாக அமையும்.
புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செய்த பரிகாரங்களுக்கு பலனாக இப்பொழுது புத்திரப்பேறு கிட்டும். பூர்வீக சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்
காட்டுவீர்கள்.
குருவின் பார்வை பலத்தால் எதிரிகள் உதிரியாவர். எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். குறிப்பாக வெளிநாட்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் எண்ணியது போல காரியங்கள் கைகூடும்.
பழைய நகைகளைக் கொடுத்து விட்டுப் புதிய நகை வாங்கி அணிந்து அழகுபார்க்கும் சூழ்நிலை உருவாகும்.
வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைக்கும்.
தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும். முன்னோர்கள் கட்டிவைத்த ஆலயத்திருப்பணிகளை முறையாகச்செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். பங்காளிப் பகை மாறும்.
பயணங்களுக்கு ஏற்ற விதத்தில் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். புதிய பாதை புலப்படும். காரியத் தடைகள் அகலும்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிக ராசிக்குள்ளேயே உலாவருகின்றார். இதன் பலனாக 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன.
நலம் தரும் 4-ம் இடம் புனிதமடைவதால் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறப்போகின்றது. மாலைசூடும் வாய்ப்புகளும், மகிழ்ச்சியான சம்பவங்களும் இல்லத்தில் நடைபெறப் போகின்றது. போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் கூடும்.
6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன் சுமை குறையப் புதிய வாய்ப்புகளும் உருவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வேலையில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.
பணி நிரந்தரமாகாதவர்களுக்கு இப்பொழுது பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும். பணி நீக்கம் செய்யப்பட்டுப் பலமாதங்களாக வீட்டில் இருந்தவர்களுக்கு இப்பொழுது மீண்டும் அழைப்புகள் வரலாம். வரும் வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொள்வது நல்லது.
மேலும் பழைய வாகனங்கள் பழுதாகி, பழுதாகி மனதை வாடவைக்கின்றது என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது புதிய வாகனம் வாங்க முன்பதிவு செய்வீர்கள். பிறமொழி பேசும் நண்பர்களால் நன்மை கிடைக்கும்.
தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர் களைச் சேர்த்துக்கொள்வீர்கள்.
வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
வெளிநாட்டில் பணிபுரிவதற்காக சென்று தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்லவர்களின் தொடர்பால் நலமும் கிடைக்கும், வளமும் கிடைக்கும்.
வீடு, இடமாற்றங்கள் உத்தியோக மாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நேரமிது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டுமுழுவதும் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியாக உலா வருகின்றார்.
இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார்.
எனவே சனியின் பார்வை பதியும் இடங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். 3, 7, 10 ஆகிய மூன்று இடங்களிலும் சனியின் பார்வை பதிகின்றது.
எனவே உடன்பிறப்புகள் வழியே உதவிகள் கிடைக்கும். கடன்சுமை தீர அவர் களது ஆலோசனை கைகொடுக்கும்.
எதிர்பாராத விதத்தில் இல்லத்தில் திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
விரும்பிய காரியங்களை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். பயண வாய்ப்புகள் பலன்தருவதாக அமையும்.
இக்காலத்தில் சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களான திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கு வாய்ப்பிருக்கும்பொழுது சென்று வழிபட்டு வருவது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். இதன் விளைவாக சர்ப்ப தோஷம் உருவாகின்றது.
எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கைதான் உங்களுக்கு அமையும். ஒருதொகை கரைந்த பிறகே அடுத்ததொகை உங்கள் கரங்களில் புரளும்.
இன்பமும், துன்பமும் கலந்து வரும் இந்த நேரத்தில் இன்பங்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
மனஅமைதி கொஞ்சம் குறையலாம். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கையும் குறையும். பொதுவாக இக்காலத்தில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் விரயங்களிலிருந்து தப்பிக்க இயலும்.
சனி செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. செவ்வாய் 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். இவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதன் மூலம் பிள்ளைகளால் தொல்லை ஏற்படும்.
பிரச்சினைகள் அதிகரிக்கும். இடம் வாங்கியதை விற்க நேரிடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மறுப்பர். கடன் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தப் புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாகவே இருக்கும். வரும் மாற்றங்களும் நல்ல மாற்றங்களாகவே வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அப்பொழுதுதான் மனஅமைதி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் ஐப்பசிக்கு மேல் முடிவாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
சிலருக்கு கட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் வாய்ப்புகள் கைகூடலாம். தொழிலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்படலாம். சர்ப்ப தோஷத்திற்கான கிரக அமைப்பு இருப்பதால் நிரந்தமாக நீங்கள் எந்த முடிவும் எடுக்க இயலாது. தடைகளும், தடுமாற்றங்களும் இடைஇடையே வரலாம்.
பிள்ளைகளால் பிரச்சினை ஏற்பட்டு அகலும். பொன். பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். தாய் மற்றும் சகோதரர்களின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களும் பலன்தரும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. அனுமன் கவசம் பாடி வழிபடுவதோடு வெற்றிலை மாலையும் சூட்டலாம்.
திசைமாறிய குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும்.
2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்கள் 1
– Daily Thanthi

Back to top button