செய்திகள்

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? – உண்மை என்ன?-what are the side effects of covid 19 vaccine in tamil

கடந்த ஜனவரி 16 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல், தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்த போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என அரசு மக்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக சமீபகாலமாக பரப்பப்பட்டு வரும் சில போலிச் செய்திகள் குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் இங்கு பார்க்கலாம்.

“கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும்”

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசுதோஷ் சின்ஹா என்பவர் “தடுப்பு மருந்தில் இருக்கும் சில பொருட்கள் நம்மை பாதிக்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம்” எனக் கூறினார். ஆனால், அவர் கருத்தை நிரூபிக்கும் வகையிலான எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை.

“தடுப்பூசி குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது முற்றிலும் தவறானது” என இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான (டி.சி.ஜி.ஐ) விளக்கமளித்தது. தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் சிலருக்கு மிதமான காய்ச்சல், வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டாலும், இந்த தடுப்பு மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் தன் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான இந்த வதந்திகளை மறுத்திருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என இந்தியாவில் வதந்திகள் பரவுவது இது முதல் முறையல்ல.

இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு முன் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது கூட, இதுபோன்ற வதந்திகளால் சில இந்தியர்கள் மருந்தை எடுத்துக் கொள்ள மறுத்தார்கள்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுவோம் என்பதற்கு ஆதாரமில்லை.

“அமெரிக்கா, பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிக்கு அதிக பணம் செலுத்த வேண்டும்”

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இலவசம் என்றும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தடுப்பூசிக்கு அதிக பணம் செலுத்த வேண்டும் எனவும் வலைதளத்தில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ட்விட்டர் பதிவில் “அமெரிக்காவில் தடுப்பூசி விலை 5,000 ரூபாய், பிரிட்டனில் தடுப்பூசி விலை 3,000 ரூபாய், இந்தியாவில் இலவசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

இதை ஒரு முன்னணி இந்தி தொலைக்காட்சி சேனலான ஏபிபி நியுஸ் நிறுவனமும் மறுபகிர்வு செய்து, பிறகு நீக்கிவிட்டது. இதில் கூறப்பட்டிருக்கும் தொகை முற்றிலும் தவறானவை.

கொரோனா தடுப்பூசி இலவசம் எனவும், தடுப்பூசியை வழங்குவதற்கு மட்டும் சிறிய கட்டணம் இருக்கலாம் எனவும் அமெரிக்க அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஆனால், பல அமெரிக்கர்கள், இந்தக் கட்டணத்தை தங்களின் பல்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் சிறப்பு கொரோனா நிவாரண நிதி மூலம் இந்தச் செலவைப் பெற்றுக் கொள்ளலாம். ஆக, அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசிக்கு பணம் செலுத்தத் தேவை இல்லை.

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. பிரிட்டனில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் எல்லாமே ‘நேஷனல் ஹெல்த் சர்வீஸ்’ மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கூட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது உண்மை தான். ஆனால், அடுத்தடுத்த கட்டங்களில் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதை இன்னும் அரசு தெளிவுபடுத்தவில்லை.

“தடுப்பூசியில் பன்றி இறைச்சி இருக்கிறது”

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

“கொரோனா தடுப்பூசியில் பன்றி இறைச்சி இருக்கலாம், எனவே இஸ்லாமியர்கள் யாரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக் கூடாது” என இந்தியாவில் இருக்கும் சில மதகுருமார்கள் கூறினார்கள்.

பல தடுப்பு மருந்துகளில் போர்க் ஜெலடின்களை நிலைப்படுத்தும் ரசாயனமாகப் பயன்படுத்துவார்கள். இஸ்லாத்தில் பன்றியை உட்கொள்ளக் கூடாது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே இதுவரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை. ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்துகளின் உட்பொருட்களிலும் போர்க் ஜெலடின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசியில் மைக்ரோசிப் இருக்கிறது”

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

கொரோனா தடுப்பு மருந்தில் மைக்ரோசிப்கள் இருப்பதாக இந்திய சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே தவறான தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

“கொரோனா தடுப்பு மருந்தில் சிப் இருக்கிறது, அது உங்கள் மூளையை கட்டுப்படுத்தும்” என ஒரு சிறிய காணொளியில் ஓர் இஸ்லாமிய மதகுரு பேசியிருக்கிறார். அந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வைரலானது.

எந்த கொரோனா தடுப்பூசியிலும் மைக்ரோசிப்கள் ஒரு பகுதியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source BBC

Back to top button