ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு காத்திருப்பவர்கள் 220 000: இந்தியர்களே பட்டியலில் அதிகம்!
ஆஸ்திரேலிய குடியரிமைக்காக விண்ணப்பங்களை ஒப்படைத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து இருபதினாயிரமாக உயர்ந்துள்ளது என்று உள்துறை அமைச்சிலிருந்து பெற்றுக்கொண்ட தரவுகள் கூறுகின்றன.
இந்த விண்ணப்பதாரிகளில் இந்தியர்களே அதிகம். சுமார் 30 ஆயிரம் பேர் தங்களது ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவை சேர்ந்த 27 ஆயிரம் பேரும் சீனாவை சேர்ந்த 17 ஆயிரம் பேரும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தான், பிலீப்பீன்ஸ், பாகிஸ்தான், வியட்னாம், நியூஸிலாந்து நாட்டவர்களும் உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கவேண்டிய சராசரி காத்திருப்பு காலம் லேபர் ஆட்சிக்காலத்தில் 167 என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த காத்திருப்பு காலம் 413 நாட்களாக உயர்ந்துள்ளது. இதற்கான காரணம், தங்களது அமைச்சு நேர்த்தியாகப்பணி செய்வதுதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் வீதம் 2018 – 2019 காலப்பகுதியில் வரலாறு காணாதளவு வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் மாத்திரமே குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த வருடம் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணபித்தவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்தினால் குறைந்திருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளிவந்துள்ளது.