செய்திகள்

க.அன்பழகன் வாழ்க்கையும் பயணமும்: சில முக்கிய நிகழ்வுகள்

தி.மு.க. பொதுச் செயலாளரும் மூத்த திராவிட இயக்கத் தலைவருமான க. அன்பழகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98.

1922 டிசம்பர் 19: திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கல்யாணசுந்தரம் – சொர்ணம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ராமையா.

1933: கும்பகோணத்தில் மகாமக எதிர்ப்புப் பரப்புரை சிங்கை கோவிந்தராஜன் தலைமையில் நடந்தபோது, சிறுவனாகப் பங்கேற்றார் ராமையா. இதுவே அவரது முதல் அரசியல் செயல்பாடு.

1942: தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் சிதம்பரத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் தேர்ச்சியடைந்தார். பிற்காலத்தில் நெருங்கிய நண்பரான மு. கருணாநிதியைச் சந்தித்தார்.

1942: மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ராமையா என்ற பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.

1943: சிதம்பரத்தில் நடந்த நீதிக் கட்சியின் போர் ஆதரவு மாநாட்டில் பெரியாருடன் சேர்ந்து சொற்பொழிவாற்றினார்.

1944: திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் அன்பழகனை அழைத்துப் பேச வைத்தார் மு. கருணாநிதி.

1945: பெரியார் தலைமையில் வெற்றிச் செல்வி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் அன்பழகன்.

1949 செப்டம்பர் 19: திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கவிழா கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

க. அன்பழகன்

1957: இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிக் கைதாகி, 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் அன்பழகன். சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரானார்.

1959: தி.மு.க. தொழிற்சங்கத்தின் செயலாளராகத் தேர்வானார் அன்பழகன்.

1962: எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அன்பழகன், சென்னை – செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற மேலவைக்கு தேர்வானார்.

1964: இந்தி எதிர்ப்பு மறியலில் பங்கேற்றார். ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1967: திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினரானார்.

1968: லண்டனில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் பங்கேற்றார்.

1971: புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரானார் அன்பழகன்.

1978: இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டியதால் கைதுசெய்யப்பட்டார்.

1978 ஜூன் 18: தி.மு.கவின் பொதுச் செயலாளராக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1983: ஈழப் பிரச்சனையை முன்வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மு. கருணாநிதியும் க. அன்பழகனும் ராஜினாமா செய்தனர்.

க. அன்பழகன்

1984: பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1986: இந்தி திணிப்பை எதிர்த்து அரசியல் சட்டப் பிரிவை எரித்ததால் க. அன்பழகனின் பதவி உட்பட பத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன.

1989: அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற க. அன்பழகன், மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1996: துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்பழகன், மீண்டும் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2006: துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2011: வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிவாய்ப்பை இழந்தார்.

2014 ஜனவரி 9: ஒன்பதாவது முறையாக தி.மு.கவின் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார் அன்பழகன்.

Back to top button