செய்திகள்

Finally யூடியூப் சேனலின் வருவாய் எவ்வளவு தெரியுமா? – இன்ஜினியரிங் டூ யூ -டியூப் சேனல்

வெகுளித்தனமான கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கிற விஷயங்களை கதைக்களமாகக் கொண்டது ஃபைனலி (Finally ) யூடியூப் சேனல். இந்த சேனல், மற்றும் அந்த கதாபாத்திரம் என பல விஷயங்களை ஃபைனலி சேனலின் முகமான பாரத்திடம் பேசினோம்.

கே : எப்பொழுது யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்தீர்கள் ?

ப : கல்லூரியில் முதல் மூன்று ஆண்டுகள் வரையில் எதுவுமே தெரியாது. நான்காவது ஆண்டு ஆரம்பித்த உடனேயே இதற்கு பின்னர் நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற எண்ணம் வந்துவிடும். என்னுடன் படித்தவர்கள் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும்போது சுற்றியுள்ளவர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னுடைய படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்பை கூடுதலாக படித்துவிட்டு ஐடி கம்பெனிக்கு போய்விடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அப்படி எல்லா முயற்சிகளும் எடுத்த பிறகும் எங்கேயும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எதுவுமே இல்லாம நின்ற சமயத்திலிருந்து மீடியா என்னுடன் இருந்தது. அதுதான் அதை நான் பற்றிக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.

கே : இந்த யூடியூப் பிளார்ட்ஃபார்ம் எப்பொழுது பிசினஸாக மாறியது ?

ப : ‘Why Singles are always single’ என்கிற கான்செப்டில் எல்லோரும் ஒரு கான்செப்ட் பண்றாங்க.யாருமே இதுவரை டிரை பண்ணாத நம்மால் முடிஞ்சதை நாம பண்ணனும் என நிரஞ்சனிடம் சொன்னேன். அதுவரையில் 500,600 பேர் மட்டுமே எங்களுடைய சேனலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வீடியோவிற்கு பிறகு 2000பேர் எங்களுடைய சேனலை பார்க்க ஆரம்பித்தார்கள். அதுதான் எங்களுடைய முதல் வெற்றி. சீரியல்நடிகை நீலிமா ராணி, ஶ்ரீதேவி போன்றவர்கள் எங்களுடைய வீடியோவை டப்ஸ்மாஷ் செய்து பதிவிட்டிருந்தார்கள். இந்த வெற்றி எங்கே முடிவடையும் என்பது எனக்கு தெரியும். நான் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து இதை நான் பிசினஸாக மாற்றவில்லை எனில் கண்டிப்பாக தோற்றுவிடுவோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஃபைனலி ஓரளவிற்கு வெற்றி பெற ஆரம்பித்த பொழுதே, எனக்குள் எல்லா பிளானும் வந்துவிட்டது. அப்பொழுதே ஏழு சேனல் வரையில் ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

கே : ஆரம்பித்தில் கிடைத்த வருவாய் தொகை, தற்பொழுது கிடைக்கும் வருவாய் தொகை பற்றி குறிப்பிட முடியுமா?

Finally யூடியூப் சேனலின் வருவாய் எவ்வளவு தெரியுமா? - பாரத்தின் வெற்றி பயணம்படத்தின் காப்புரிமை FACEBOOK/ACTORBHAARATH

ப : ஆரம்பத்தில் 120 டாலர் ஒரு மாதத்திற்கு வருவாயாக கிடைத்தது. தற்பொழுது மாதத்திற்கு குறைந்தபட்சம் 1500 டாலர் வருவாய் கிடைக்கிறது. இது ஃபைனலியில் மட்டும். ஒவ்வொரு சேனலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

கே : தற்பொழுது யூடியூப் சேனலிலிருந்து வருபவர்கள் படங்கள் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கிறதா ?

ப : கண்டிப்பாக இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துச் செல்லலாம் என நினைக்கிறோம்.

கே : யூடியூப்பில் ஏற்கனவே வெற்றியடைந்த பிறகு தொலைக்காட்சியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

ப : நான் மேற்சொன்ன 1500 டாலரை நம்மளுடைய பணத்திற்கு மாற்றும்போது ஜிஎஸ்டி வரி பிடித்து கையில் 70ஆயிரம் ரூபாய் தான் வரும். 30,40 பேர் எங்களுடன் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், எங்களுடைய அலுவலக வாடகை செலுத்த வேண்டும் இப்படி எங்களுடைய தேவைகளை இவற்றைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியவில்லை. தொலைக்காட்சியில் அதிக அளவில் சம்பளம் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற பணத்தை வைத்து யூடியூப் சேனலை நன்றாக கொண்டு செல்ல முடியும். தொலைக்காட்சியில் பண்ணும்போது பல விமர்சனங்கள் வரும் என்பது எனக்கு தெரியும். தொலைக்காட்சியைப் பொறுத்தவரையில், ஏ, பி, சி என்கிற மூன்று சென்டர் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். இன்டர்நெட்டைப் பொறுத்தவரையில் ஏ சென்டர் ஆடியன்ஸ் மட்டும்தான். இருவருக்கும் எப்படி வீடியோக்கள் கொடுக்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். தொலைக்காட்சி பார்த்துவிட்டு நன்றாக இல்லை என சொல்பவர்கள் ஏ சென்டர் ஆடியன்ஸ் தான். வெளியே செல்லும்போது பலரும் என்னை ‘மிஸ்டர் பாரத்’ என்று தான் சொல்கிறார்கள்.

Finally யூடியூப் சேனலின் வருவாய் எவ்வளவு தெரியுமா? - பாரத்தின் வெற்றி பயணம்படத்தின் காப்புரிமை FACEBOOK/ACTORBHAARATH

கே : ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் வந்ததாகவும், நீங்கள் அவற்றை தவிர்த்துவிட்டதாகவும் கேள்விபட்டோம். என்ன காரணம்?

ப : ஆரம்பத்தில் வந்த வாய்ப்புகளை நான் தவிர்த்தது உண்மை. இப்பொழுது பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். அதற்கு பணப்பற்றாக்குறை காரணமில்லை. சினிமாவில் என்ன பண்ணுகிறார்கள் என்பதே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. சினிமா என்றால் என்ன.. அங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக முதலில் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன். அது புது உலகமாக இருந்தது. பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படுகிற சினிமா எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. என்னுடன் இருக்கிறவர்களையும் அந்த உலகத்தை கற்றுக் கொள்ள சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கே : அடுத்த திட்டம் ?

ப : ரேடியோவிற்கு பிறகு டிவி வந்தது, டிவிக்கு பிறகு யூடியூப் வந்தது, யூடியூப்பிற்கு பிறகு ஆப் வந்து விட்டது. அந்த ஆப்பில் நமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட வேண்டும் என நினைத்திருக்கிறேன். அதற்கு மிகப் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சி ஒரு புறம் இருக்கிறது. மறுபுறம், சேனலை மேம்படுத்தும் திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறேன்.

Source : BBC

Back to top button