செய்திகள்

“MH370 விமானி தற்கொலை எண்ணம் கொண்டிருந்தார்” – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் விளக்கத்தால் சர்ச்சை

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்எச்-370’ விமானம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த விமானத்தின் தலைமை விமானிக்கு தற்கொலை எண்ணமும், பலரை மொத்தமாகக் கொல்லும் திட்டமும் இருந்திருக்கலாம் என மலேசிய அரசின் உயர்மட்டம் சார்பாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான MH 370 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு புறப்பட்ட அந்த போயிங் 777 ரக விமானத்தில் பயணிகள், விமானக் குழுவினர் என மொத்தம் 239 பேர் பயணித்தனர்.

திடீரென மாயமான MH 370 விமானம் பிறகு ரேடார் கருவிகளில் தென்படவே இல்லை. இதையடுத்து பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எந்தப் பலனும் இல்லை. வேறு வழியின்றி அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம், கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது மலேசிய அரசு.

MH370 மாயமாகியது எப்படி?படத்தின் காப்புரிமைAFP

அனைத்துலக விமானப் போக்குவரத்து துறையில் இதுவரை காரணம் கண்டறியப்படாத மர்மம் நிறைந்த ஒரு நிகழ்வாகவே இந்த விபத்து கருதப்படுகிறது.

மலேசிய விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று பலவிதமான ஆருடங்கள் தொடக்கத்தில் எழுந்தன.

விமானம் இந்தியாவுக்கு அருகே உள்ள ஒரு தீவுப் பகுதியில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அடுத்து, ‘எம்எச்-370’ தலைமை விமானியே அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைச் செயல்படுத்த விமானத்தை வேண்டும் என்றே கடலில் விழச் செய்திருக்கலாம் என்றும் பரபரப்பு எழுந்தது.

“எனக்கு தகவல் தெரிவித்தது யார் என்பதை சொல்ல மாட்டேன்”

விமானம் மாயமாகி, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் இத்தகைய ஆருடங்களையும் சந்தேகங்களையும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ள தகவல், மீண்டும் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள “எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி” (MH370: The Untold Story) என்ற ஆவணப்படத்திற்காக அவர் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில்தான் இந்த புதுத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

MH370 மாயமாகியது எப்படி?படத்தின் காப்புரிமைNURPHOTO / GETTY

“விமானம் மாயமான பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் துவக்கத்திலேயே ‘எம்எச்-370’ தலைமை விமானி பலரைக் கொல்லும் திட்டத்துடனும், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனும் செயல்பட்டு இருப்பதாக மலேசிய அரசு நம்பியது. மலேசிய அரசின் உயர்மட்ட அளவில் இருந்தவர்கள் இவ்வாறு நம்பியதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன்,” என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டோனி அப்பாட் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இக்குறிப்பிட்ட தகவலை தெரிவித்தது யார்? என்பதை வெளிப்படுத்த அவர் மறுத்துள்ளார்.

‘எம்எச்-370’ விமானம் மாயமான போது ஆஸ்திரேலியாவில் இவரும், மலேசியாவில் நஜீப் துன் ரசாக்கும் பிரதமர்களாக பொறுப்பில் இருந்தனர்.

விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை பெரும் பொருட்செலவில் பல மாதங்கள் நீடித்தது. எனினும் விமானத்தில் இருந்து சிதறிய மூன்று சிறிய பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இதையடுத்து தேடுதல் வேட்டை கைவிடப்பட்டது.

அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவில், விமானம் மாயமானதற்கு தொழில்நுட்ப ரீதியில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் தலைமை விமானி ஸஹாரி அஹமட் ஷா மீது வெளிப்படையாக குற்றம்சாட்டவும் இயலவில்லை. எம்எச்-370 தொடர்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மலேசிய அரசு வெளியிட்ட அறிக்கையில், அந்த விமானத்தை வேறு யாரேனும் தவறாக கையாண்டிருக்கலாம், மூன்றாம் தரப்பின் தலையீடு இருந்திருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிம் கிட் சியாங்: முந்தைய ஆட்சியாளர்கள் வாய் திறக்க வேண்டும்

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக மலேசியாவின் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் வலியுறுத்தி உள்ளார்.

மாயமான விமாளனத்தை தேடும் பணியில் மலேசிய ராணுவம் ஈடுபட்டதுபடத்தின் காப்புரிமைAFP
Image captionமாயமான விமாளனத்தை தேடும் பணியில் மலேசிய ராணுவம் ஈடுபட்டது

“முந்தைய ஆட்சியாளர்கள் வாய்திறக்க வேண்டும். மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு தரப்பினருக்கும் இது ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கக்கூடும். விமானம் மாயமானது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள “எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற ஆவணப்படத்திற்காக உலகமே காத்திருக்கிறது,” என்று லிம் கூறினார்.

ஆதாரமின்றி விமானியை குற்றம்சாட்டுவது பொறுப்பற்ற செயல் என்கிறார் முன்னாள் பிரதமர்

மலேசிய விமானம் மாயமானதற்கு அதன் விமானிதான் காரணம் என்று உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் கூறுவதை ஏற்க இயலாது என மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் கருப்புப் பெட்டியும், விமானிகளுக்கான பகுதியில் உள்ள ஒலிப்பதிவுக் கருவியில் (cockpit voice recorders) உள்ள பதிவுகளும் கிடைக்காத நிலையில், தலைமை விமானி தான் நடந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுவது நியாயமற்ற, சட்டப்படி பொறுப்பற்ற செயல் என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் வெளியிட்ட தகவல் குறித்து கேள்வி எழுப்பிய போதே, நஜீப் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் எம்எச்-370 தலைமை விமானி ஸஹாரி செயல்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு இருப்பதை புறக்கணிக்கவில்லை. விசாரணையில் இது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது”.

“மேலும் அந்த விமானி அன்றைய எதிர்க்கட்சியில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றுள்ளார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், விமானி ஸஹாரி தனக்குத் தெரிந்தவர் என்பதை பின்னர் ஒப்புக் கொண்டுள்ளார்,” என்று நஜீப் தெரிவித்துள்ளார்.

அந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும், மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் அன்வார் இப்ராகிம் தான் அந்தத் தலைவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் விமானி ஸஹாரி தற்கொலை எண்ணத்துடன் செயல்பட்டிருந்தால் அதற்காக எந்தவொரு அரசியல் கட்சியையும் குற்றம்சொல்ல முடியாது என்றும் நஜீப் குறிப்பிட்டார்.

ஆதாரம் இல்லை – மலேசிய காவல்துறை தலைவர்

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ள தகவலை உறுதி செய்வதற்குரிய எந்த ஆதாரமும் இல்லை என்று மலேசிய காவல்துறை தலைவர் அம்துல் ஹமீட் படோர் தெரிவித்துள்ளார்.

மாயமான விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், அதற்கு ஏற்பட்ட கதிக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதுவரை விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பயணம் செய்த பயணிகளின் கதியும் தெரியவில்லை. அது தான் பிரச்சினை. மலேசிய உயர்மட்ட அதிகாரி யார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் விமானம் தொடர்பான விசாரணையில் நானும் ஈடுபட்டிருந்தேன்,” என்று அம்துல் ஹமீட் படோர் மேலும் தெரிவித்துள்ளார்.

MH370 மாயமாகியது எப்படி?படத்தின் காப்புரிமைGOH CHAI HIN / GETTY

இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ள தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்று மலேசிய விமானப் போக்குவரத்து துறையின் முன்னாள் தலைமைச் செயலர் அசாருதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தின் மர்மம் நீடித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமரின் கூற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காயங்களை மீண்டும் கிளறுவதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தலைமை விமானி ஸஹாரி அகமது ஷா எப்படிப்பட்டவர்?

விமானம் கடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. யாரேனும் கடத்தி இருந்தால் மலேசியாவுடனோ, வேறு ஏதேனும் நாடுகளுடனோ பேரம் பேசி இருப்பார்கள். தவிர, விமானிகள் இருவரிடம் இருந்து கடத்தப்பட்டது தொடர்பான ரகசியத் தகவல் (SECRET MESSAGE) ஏதும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை.

MH 370 விமானத்தின் தலைமை விமானியாக செயல்பட்டவர் ஸஹாரி அகமது ஷா. இவர் மீது தான் முதல் சந்தேகம் எழுந்தது. அனைவரும் இவர்தான் விமானத்தைக் கடத்தி இருக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்தனர்.

ஸஹாரி, தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் என்றும், அவர் தான் விமானத்தை கடலில் மூழ்கடித்தார் என்றும் கூறப்பட்டது.

MH370 மாயமாகியது எப்படி?படத்தின் காப்புரிமைHOANG DINH NAM

ஆனால் இந்தக் கூற்றை யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

அதேசமயம், ஸகாரி மிக அன்பானவர், விமானப் பணியை அளவுக்கு அதிகமாக நேசித்தவர், நல்ல குடும்பத் தலைவர், தாம் சார்ந்த மதத்தை முறையாகப் பின்பற்றியவர் என்று அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் நற்சான்றிதழ் வழங்கினர்.

தாம் மிகவும் நேசித்த பைலட் பணியைச் செய்து கொண்டிருக்கும்போதே ஸகாரி மரணத்தை தழுவ முடிவு செய்ததாகவும் ஒரு கூற்று வலம் வருகிறது.

தென்கிழக்கு நாடுகளுக்குச் சொந்தமான ரேடார் கருவிகளில் MH 370 விமானம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர் விமானத்தை தாழ்வாகச் செலுத்தியதாக ஒரு தகவல் வெளியானது.

வீட்டிலேயே தீவிர பயிற்சி மேற்கொண்ட விமானி

இதற்கிடையே ஸகாரி, தன் வீட்டிலேயே விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியைப் பெற உதவும் சிமுலேட்டர் (SIMULATOR) கருவியை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்தக் கருவியை வாங்குவது, பொருத்துவது, பராமரிப்பது போன்றவற்றுக்குப் பெருந்தொகை தேவைப்படும்.

விமானப் பணி மீதான ஈடுபாடு காரணமாக இந்தக் கருவியை வாங்கி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதில் தீவிரப் பயிற்சி செய்துள்ளார் ஸகாரி.

உலக வரைபடத்தின் அடிப்படையில் எந்த நாட்டுக்கு எந்த வழியில் விமானத்தைச் செலுத்தினால் விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என்பது தொடர்பாக இந்தக் கருவியில் பயிற்சி மேற்கொள்ளப்பட முடியும்.

அந்த வகையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அந்தமான் தீவுகளைச் சென்றடவைதற்கான வான் வழியில் அவர் பலமுறை பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து கணக்கிட்ட சிலர் ஸகாரி மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

மலேசிய விமானம் கம்போடிய வனப்பகுதியில் நொறுங்கி விழுந்ததா?

சில மாதங்களுக்கு முன்பு, கனடா நாட்டு விமான விபத்து புலனாய்வு நிபுணர் லாரி வான்ஸ் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. MH 370 விமானம் திட்டமிட்டு கடத்தப்பட்டதாகவும், விமானம் விபத்தில் சிக்கியது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 64 வயதாகும் பொறியியல் நிபுணரான பீட்டர் மக்மென் என்பவர் மலேசிய விமானத்தின் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்துவிட்டதாக முன்பு கூறியிருந்தார்.

MH370 மாயமாகியது எப்படி?படத்தின் காப்புரிமைHOANG DINH NAM

மொரீஷியஸ் நாட்டுக்கு அருகே உள்ள தீவில் தேடுதல் பணியை மேற்கொண்டால், விமானப் பாகங்களைக் கண்டெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மற்றொரு திடீர் திருப்பமாக, MH 370 கம்போடிய வனப்பகுதியில் விழுந்துள்ளதாகச் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இயன் வில்சன். இவரும் கூகுள் எர்த் மூலமாகவே விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார்.

இயன் தனது சகோதரர் ஜேக்குடன் கடந்த ஆண்டும் கூட கம்போடிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார். அப்போது பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாம். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என அஞ்சி, சகோதரர்கள் இருவரும் அச்சமயம் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டனர்.

தற்போது மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட கணிசமான தொகை தேவைப்படுகிறதாம். மிக விரைவில் தேவையான பணம் திரண்டவுடன் இருவரும் கம்போடியாவுக்கு பறக்க உள்ளனர்.

“MH 370 விமானம் நடுவானில் தேவையில்லாத திசைகளில் பறந்துள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் விமானத்தை நன்கு இயக்கத் தெரிந்தவர்களால் தான் இவ்வாறு பல கோணங்களில் அதை திருப்ப முடியும்.

“விமானம் மாயமாவதற்கு முந்தைய சில நிமிடங்கள் விமானத்திற்குள் பெரும் போராட்டம் நடந்திருக்க வாய்ப்புண்டு. அது குறித்து தனியே ஆய்வும் விசாரணையும் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னதாக நாங்கள் கம்போடிய வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ள MH 370 விமானத்தைக் கண்டுபிடித்துவிடுவோம்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயன் வில்சன்.

போயிங் விமானங்கள் மிக பாதுகாப்பானவை

போயிங் 777 விமானங்கள் சேவைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. மொத்தமே 6 விமானங்கள் மட்டுமே விபத்துக்களில் சிக்கி இருக்கின்றன. அதில், மாயமான மலேசிய விமானமும் ஒன்று.

2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, உற்பத்தி செய்யப்பட்ட 1,412 போயிங் 777 விமானங்களில் வெறும் 0.4 சதவீத விமானங்கள் மட்டுமே விபத்தில் சிக்கி உள்ளன. நீண்ட தூர தடங்களில் மிக பாதுகாப்பான விமானமாக அதிக அளவில் இது பயன்படுத்தப்படுகிறது.

Back to top button