செய்திகள்

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி விபத்து ; இதுவரை 54 சடலங்கள் மீட்பு

கிழக்கு துருக்கியின் வான் ஏரியிலிருந்து நேற்று சனிக்கிழமை மேலும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

குறித்த ஏரியினூடாக சுமார் 60 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகொன்று கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதன் பின்னர் மீட்பு படையினரால் மீட்பு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று வரை மொத்தமாக 54 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

ஈரானுடனான துருக்கயின் எல்லையில் அமைந்துள்ள வான் ஏரியினூடாக ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் துருக்கிக்குச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு குறித்த ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துடன், 64 பேர் மீட்கப்பட்டனர்.

2015-2016 ஆம் ஆண்டில் துருக்கியிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கிரேக்கத்தை அடைந்தனர்.

ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க ஐரோப்பாவிற்குச் செல்வதை நோக்கமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கிய போக்குவரத்து புள்ளியாக இருந்து வருகிறது.

Back to top button