செய்திகள்

கொரோனா வைரஸ்: இந்தியா வந்த 15 லட்சம் வெளிநாட்டினர் – மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா?

கடந்த இரண்டு மாதத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு 15 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கைக்கும், கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனைக்கு உட்படுத்தபட்டோரின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருப்பதால், வைரஸ் தொற்று பரவலை கண்காணிக்கும் இந்தியாவின் முயற்சி, தீவிர ஆபத்தை ஏற்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

கோவிட்-19 நெருக்கடி மேலாண்மை குழுவிற்கு தலைமை தாங்கும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா, இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ்

மேலும், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து கண்காணிப்பில் இல்லாத பயணிகளை உடனடியாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகளை, கடந்த ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து இந்தியா பரிசோதிக்க தொடங்கியதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மார்ச் 23ஆம் தேதி வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கைக்கும் மாநிலங்கள் அவ்வாறு வந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தபடுத்திய எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளது,” என தனது கடிதத்தில் ராஜீவ் கெளபா தெரிவித்துள்ளார்.

“இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டு பயணம் செய்தவர்களாகவே உள்ளனர் என்பதால், வைரஸ் பரவுதலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பலன் இல்லாமல் போகலாம். எனவே அவர்கள் அனைவரையும் தீவிரமாக கண்காணிப்பது மிகவும் முக்கியம்” என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாக ராஜீவ் கெளபா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

பஞ்சாபில், ஜெர்மனி மற்றும் இத்தாலி சென்று திரும்பிய ஒருவர், அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும் அதனை மதிக்காமல் பல இடங்களுக்கு சென்று நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்துள்ளார். இதனால் அங்கு 20 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதேபோல லண்டனில் இருந்து கொல்கத்தா திரும்பிய பதின்ம வயது இளைஞர் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்றதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த இளைஞரின் தாய், மூத்த அரசாங்க அதிகாரி ஆவார். அதோடு அவர், மேற்கு வங்க தலைமை செயலகத்தில் நடந்த கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். அங்குதான் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியும் இருப்பார்.

இந்நிலையில்தான் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Back to top button