செய்திகள்

திருப்பூர் அருகே அவிநாசியில் பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி விபத்து: 19 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழக்கிழமை)அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் குறைந்தது 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், 14 பேர் ஆண்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒன்பது பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள எட்டு பேரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுக்கு சொந்தமான பேருந்தின் மீது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டைல்ஸ் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பை தாண்டி எதிரே வந்த பேருந்தின் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் அருகே பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி விபத்து: 20 பேர் பலிபடத்தின் காப்புரிமை RAMESH

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

மீட்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை ஒருங்கிணைக்க கேரளாவின் பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவா விக்ரம் அவிநாசி வந்துள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் அவிநாசி, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Sources : BBC

Back to top button