செய்திகள்

மும்பை மக்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஓர் இளைஞரின் நம்பிக்கை முயற்சி – Shahnawaz Sheikh

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வரும் கொடுமையான இந்தக் காலகட்டத்தில், மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாததால், மக்கள் உயிர் இழந்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஷாநவாஸ் ஷேக் சில உயிர்களைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவர் தனது விலை உயர்ந்த எஸ்யூவி ரக காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி மக்களுக்கு இலவச ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கினார். சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதும், தன் தங்கச் சங்கிலி மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்களையும் விற்றார். ஷாநவாஸ் ஷேக், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மக்கள் தங்கள் உயிர்களை இழக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், முடிந்தவரை மக்களுக்கு இலவச ஆக்ஸிஜனை வழங்குவதும், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதும் எனது முயற்சியாகும். இதற்காக என்னுடைய எஸ்யூவி கார் உட்பட சில மதிப்புமிக்க பொருட்களை விற்றேன்.” என்று கூறுகிறார். ஷாநவாஸிடமிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பெற்றுக்கொண்ட யக்னேஷ் திரிவேதி, “இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில், சகோதரர் ஷாநவாஸ் செய்து வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. பல அமைப்புகள் பெயரளவில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஷாநவாஸ் போன்ற சிலர் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்து வருகிறார்கள். தவிர, எந்த ஆவணமும் இல்லாமல் பிணையும் இல்லாமல் சிலிண்டர்களைக் கொடுக்கிறார். ” என்று பாராட்டுகிறார்.

இந்தியாவுக்கு உதவும் கூகுள்

சென்ற ஆண்டே தொடங்கிய சமூக பணி

உண்மையில், கொரோனாவின் முதல் அலையின் போதே, கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாநவாஸ் உதவத் தொடங்கினார். திடீரென்று அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கிய நிலையால், அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு உண்பதே கடினமாகிவிட்டது. மும்பையின் மலாட் நகரில் உள்ள மால்வணியில் பெரும்பாலான ஏழை மக்கள் குடிசைப் பகுதிகளில் தான் வாழ்கின்றனர்.வீடுகளைப் புதுப்பித்து, உட்புற வடிவமைப்புத் தொழில் செய்யும் ஷாநவாஸ், மால்வணியில் உள்ள மக்களின் சிரமத்தைக் கண்டதும், தான் திரட்டிய வருமானத்திலிருந்து பணத்தை ஒதுக்கி, ஏழைகளின் வீடுகளுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். கிராமத்திற்குச் செல்ல சிரமப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தார்.

SHAHNAWAZ SHEIKH
Shahnawaz Sheikh

ஷாநவாஸ் கூறுகிறார், “முதன்முதலில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, மால்வணி பகுதியில் தினசரி வருமானம் ஈட்டும் மக்களுக்கு உணவுக்கு வழியில்லாமல் போனது. என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு, மக்களுக்கு உதவத் தொடங்கினேன். உணவுப் பொருட்கள் வழங்கத் தொடங்கினேன். மால்வணியில் ஒரு வயலில் பிற மாநிலத் தொழிலாளர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டேன். தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்குச் செல்லச் சிரமப்பட்டனர்.அவர்கள் பதிவு செய்ய வேண்டியிருந்தது, இந்த செயல்பாட்டில், அவர்கள் தங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் அதைப் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. அந்தத் தொழிலாளர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன். “அதே நேரத்தில், அவரது நண்பர் அப்பாஸ் ரிஸ்வியின் 27 வயது சகோதரி ஆசமான் பானோ கர்ப்பமாக இருந்தார். ஆனால் மும்பையை ஒட்டிய மும்ப்ராவில் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படத் தொடங்கியது, மருத்துவமனைக்காக அலைந்து கொண்டிருந்த சமயத்தில், மும்ப்ராவில் உள்ள கல்சேகர் மருத்துவமனைக்கு வெளியே ஆசமான் உயிரிழந்தார். அப்பாஸ் தனது சகோதரிக்கு ஏற்பட்ட நிலையை ஷாநவாஸிடம் சொன்னபோது, கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதால், தேவைப்படுபவர்களுக்கு இலவச ஆக்ஸிஜனை வழங்க ஷாஹனாவாஸ் திட்டமிட்டார்.ஷாஹனாவாஸ், ‘நிலைமை மோசமாக இருந்தது, அப்பாஸ் ஆசமானின் கதையைச் சொன்னபோது, பல சமயங்களில் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாவிட்டாலும், சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைத்தால் மக்கள் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் ஆக்ஸிஜன் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் எனக்குப் பொறி தட்டியது. ஆக்ஸிஜனின் பற்றாக்குறை இருப்பதை அந்த நேரத்தில் நாங்கள் அறிந்தோம். ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பற்றி சிலரிடமும் சில மருத்துவர்களிடமும் பேசினோம், சிலிண்டர்களை எவ்வாறு பெறலாம், மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை அறிந்து கொண்டோம்.

SHAHNAWAZ SHEIKH
Shahnawaz Sheikh

‘நாங்கள் சிலிண்டர்களைக் கொண்டு வந்து, மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் கிடைக்கும் வரை நாமே ஆக்ஸிஜனைக் கொடுப்போம் என்று திட்டமிட்டோம். எங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு, சுமார் 30-40 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கினோம். இது குறித்துச் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தினோம். மக்கள் எங்களை தொடர்பு கொள்ளத் தொடங்கினர். தேவை மிகவும் அதிகரித்ததால் 30-40 சிலிண்டர்கள் என்பது மிகவும் குறைவாக இருந்தன. பின்னர் என்னுடைய எஸ்யூவி காரையும் சில தங்க நகைகளையும் விற்று சுமார் 225 சிலிண்டர்களை வாங்கினோம். அந்த நேரத்தில், எங்களைத் தொடர்பு கொண்ட ஒவ்வொருவருக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்தோம். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு இரவும் வெற்று சிலிண்டரை நிரப்ப ஒரு குழு இயங்கியது. ஷாநவாஸின் நண்பர் சையத் அப்பாஸ் ரிஸ்வி, “நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்தோம். சில முக்கிய வேலைகள் காரணமாக, என்னால் தொடர்ந்து ஷாநவாஸுடன் பணியாற்ற முடியவில்லை, ஆனால் அவர் இன்னும் தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார். அவரது இந்தச் சேவையைப் பார்த்து நா மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் சகோதரியின் மரணத்துக்குப் பிறகு அவர் தொடங்கிய இந்தப் பணியின் மூலம் இன்னும் அவர் மக்களுக்கு உயிர் அளித்து வருகிறார்.” என்று தெரிவிக்கிறார்.

முடக்கத்தால் வேலை பாதிப்பு

பொது முடக்கம் ஷாநவாஸின் பணியையும் பாதித்தது. அவரது அலுவலகம் மூடப்பட்டது. வீட்டிலிருந்து ஓரளவுக்கு வேலை பார்க்கிறார். கார் விற்கப்பட்டு விட்டாலும், தைரியம் இழக்கவில்லை. கொரோனாவின் இரண்டாவது அலை ஊழிப் பேரலையாக மாறியது. இந்த நிலையிலும் ஷா நவாஸ் தனது புனிதப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஷாநவாஸ் கொரோனாவின் இரண்டாவது அலையிலும் ஒரு சிலரது உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. ஷாநவாஸிடம் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள 225 சிறிய சிலிண்டர்கள் உள்ளன, அதை அவர் மீண்டும் மீண்டும் நிரப்பித் தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார். ஒரு சிலிண்டரை நிரப்ப சுமார் 300 ரூபாய் செலவாகும். ஷாநவாஸ் அதிகமான நோயாளிகளுக்கு உதவ விரும்புகிறார், ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால், ஒரு நாளைக்கு 40 முதல் 50 சிலிண்டர்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன.

SHAHNAWAZ SHEIKH
Shahnawaz Sheikh

ஷாநவாஸ், “நாங்கள் அதிகமான மக்களுக்கு உதவ விரும்புகிறோம், ஆனால் எங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு 40 முதல் 50 சிலிண்டர்கள் நிரப்புவதே கடினமாக உள்ளது. அனைத்து சிலிண்டர்களும் நிரப்பப்பட்டால், அதிகமான மக்களுக்கு உதவ முடியும். சில நேரங்களில் ஒரு சிலிண்டரை நிரப்ப 80 முதல் 90 கிலோமீட்டர் செல்ல வேண்டியிருக்கிறது. அதிகரித்து வரும் தேவை காரணமாக, மறு நிரப்பலுக்கான செலவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு சிலிண்டர் 150 முதல் 180 ரூபாய்க்கு நிரப்பப்பட்டது, இதன் விலை இந்த ஆண்டு 400 முதல் 600 வரை சென்றுவிட்டது. ஆனால் நான் மக்களுக்குச் சேவை செய்வதை அறிந்த அவர்கள் எனக்கு 300 ரூபாய்க்குத் தருகிறார்கள்.” என்று கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஹில் ரோட்டில் வசித்து வரும் 67 வயதான இஜாஸ் பாரூக் படேலின் தந்தை ஃபாரூக் அகமதுவின் உடல்நிலை மோசமடைந்தது, எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்கவில்லை. ஃபாரூக் படேலுக்கு ஏற்கனவே சர்க்கரை மற்றும் இதய நோய் இருந்தது. இஜாஸ் படேல் மருத்துவமனைக்காக அலைந்து கொண்டிருந்தார். எங்கும் இடமில்லை. இதற்குள் ஷா நவாஸ் பற்றி யாரோ இவரிடம் கூற, இஜாஸ் உடனடியாக ஷாநவாஸை அணுகினார், ஒரு மணி நேரத்திற்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைத்தது. இஜாஸ் படேலின் தந்தை இன்று ஆரோக்கியமாக இருக்கிறார்.

கட்டணம் பெறாமல் சேவை

இஜாஸ் ஃபாரூக் படேல், “எனது தந்தை நீரிழிவு நோயாளி, அவருக்கு இதய நோயும் உள்ளது. 2021 ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, மருத்துவமனையோ அல்லது ஆக்ஸிஜனோ கிடைக்கவில்லை. அவரது ஆக்ஸிஜன் அளவு 80-81 ஆக இருந்தது. மருத்துவமனையில் இடமில்லாததால், வீட்டிலேயே தனியாக அவரை வைத்திருந்தோம். பணம் கொடுத்தும் ஆக்சிஜன் வாங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. பின்னர் நான் ஷாநவாஸ் பற்றி அறிந்து கொண்டேன், அவர் உடனடியாக ஆக்ஸிஜனை வழங்கினார். 3 நாட்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் என்னிடம் தான் இருந்தது. நான் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஷாநவாஸ் ஒரு பெரிய சேவையைச் செய்கிறார். அவர் என்னிடமிருந்து பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சிலிண்டர் வேறொருவருக்குப்பயன்பட வேண்டும் என்று மீண்டும் நிரப்பும் செலவுக்கான தொகையை நான் கட்டாயப்படுத்தி அவரிடம் கொடுத்தேன்.” என்றார்.மும்பை மலாட் கிழக்கில் உள்ள காட்டியாவாடி பகுதியில் உள்ள யக்னேஷ் திரிவேதி நள்ளிரவில் ஷாநவாஸை அழைத்து, தனது 75 பாட்டி கஞ்சன் பென்னுக்காக சிலிண்டர் கோரினார். பல அமைப்புகளை அணுகியும் உதவி கிடைக்காத நிலையில், ஷாநவாஸ் ஷேக் தான் ஆக்சிஜனை வழங்கினார்.யக்னேஷ் திரிவேதி, “என் பாட்டி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. மேலும் படுக்கைகள் இருக்கும் மருத்துவமனைக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லை. நாங்கள் பல அமைப்புகளின் கதவுகளைத் தட்டினோம், ஆனால் அனைவரும் வாய்ச்சொல்லில் வீரராகவே இருந்தனர். நிறைய ஆவணங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் நான் 2021 ஏப்ரல் 21 அன்று ஷாநவாஸ் பாயிடம் நாடினேன். எதுவும் கேட்காமல், வெறும் ஆதார் அட்டையின் நகலை எடுத்துக் கொண்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கொடுத்தார்.” என்று தனது அனுபவத்தைக் கூறுகிறார்.

SHAHNAWAZ SHEIKH
Shahnawaz Sheikh

இது மட்டுமல்லாமல், சில உள்ளூர்த் தலைவர்களும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஷாநவாஸின் உதவியை நாடி வருகின்றனர். வடக்கு மும்பை மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகத் தலைவர் ராஜு சிர்சட், ‘நாங்கள் தொற்றுநோய் பணிக்குழுவிற்கான ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு உதவி கோரி அழைப்புகள் வரத் தொடங்கின. ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டால், ஷாநவாஸ் பாயிடமிருந்து ஆக்ஸிஜனைப் பெறுகிறோம். ஒரு சில நாட்களிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவு ஒரு மணியளவில் நாங்கள் அழைத்தாலும் ஷாநவாஸ் பாய் தொலைபேசியை எடுத்து எங்களுக்கு உதவினார்.” என்று கூறுகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தினேஷ் அண்ணப்பா தேவாடிகாவின் 63 வயதான தந்தையை ஷாநவாஸின் உதவி சென்றடைந்தது. மலாட், கர்வாடியைச் சேர்ந்த தினேஷ் தனது அனுபவத்தை விவரிக்கிறார்: ‘என் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் இடம் இல்லை. என் பக்கத்து வீட்டுக்காரர் ஷாநவாஸ் பாய் பற்றிச் சொன்னார். நாங்கள் அவரை ஏப்ரல் 16 அன்று தொடர்பு கொண்டோம். எதையும் பெறாமல், அவர் எனக்கு உதவினார். இப்போது என் தந்தைக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது, ஆனால் இக்கட்டான அந்த நேரத்தில், ஷாநவாஸ் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது”

ஹாரிஷ் ஷேக் கூறுகையில், ‘நிறைய பேர் சமூக ஊடகங்களில் உதவி செய்வதாக உறுதியளிக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளன. இவருக்கு நாங்கள் மொபைலில் செய்தியை அனுப்பியபோது, 15 நிமிடங்களுக்குள் பதில் வந்தது. ஆக்ஸிஜனின் அவசியத்தை நாங்கள் குறிப்பிட்டபோது, 15 நிமிடங்களுக்குள் சிலிண்டர் கிடைத்தது. ” என்று சிலாகிக்கிறார்.உத்தரபிரதேசத்தின் அசாம்கரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஷாநவாஸ் பிறந்தார். அவர் பிறந்தது மும்பையில். அவர் தனது சகோதரர், சகோதரி, மனைவி மற்றும் மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். ஏற்கனவே யூனிடி அண்ட் டிக்னிடி( Unity and Dignity) என்ற ஒரு அமைப்பை இவர் நடத்தி வருகிறார். ஆனால், கொரோனா தொற்றுநோய்ப் பரவல் மக்களைப் படுத்தும் பாட்டைப் பார்த்து, தன்னாலான உதவியைச் செய்ய முழுமூச்சாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

Source : BBC

Back to top button