செய்திகள்

தைப்பூசத் திருநாள் இன்று – அதிகாலையிலேயே இந்த பூஜையை செய்யுங்கள்! – Thaipusam 2021

தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த முறை, வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் வருவதால் நாம் தைப்பூசம் நாளில் நம்முடைய வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து விரதம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடுகள் செய்தால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது விசேஷம். இறைவன் ஒளி வடிவில் இருக்கிறார் என்பதை உணர்த்திய ஜீவ ஜோதியில் இரண்டர கலந்த வள்ளலார் பெருமானையும் தைப்பூசத்தில் வணங்குபவர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மேலும், வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.

இதுபோல வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும். வியாழக்கிழமையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த நல்ல நாள் வருகிறது. இந்த சுபமான நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

தைப்பூசம் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். பூஜை அறை மற்றும் வீட்டை முந்தைய நாளில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

சுத்தமான ஆடை உடுத்தி, பூஜை அறையில் எல்லா படங்களையும் அலங்காரம் செய்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து விளக்கேற்றுங்கள்.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உபவாசம் இருப்பவர்கள் மாலையில் பூஜையை முடித்து விட்டு முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இதையடுத்து, இந்த நாளில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

குபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார்.

குரு புஷ்ய யோக நாளில் புது கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டலாம். புது மந்திரம் கற்றுக் கொள்ளலாம். குருவிடம், ஆசிரியரிடம் புதிய பாடம் கற்றுக்கொள்ளலாம்.

புதிய தொழில் தொடங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகள் வாங்கலாம் இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

Back to top button