செய்திகள்

பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு

அல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் ‘சீல்’ படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது பி.டி.ஐ செய்தி நிறுவனம்.

பாகிஸ்தானில் உள்ள அபோத்தாபாத்தில் அமெரிக்க படைகளால் ஒசாமா பின் லேடன் 2011இல் கொல்லப்பட்டார்.

பெல்ஜியன் மலீன்வா என்னும் வகையைச் சேர்ந்த இந்த நாய்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த வகை நாய்கள் தீவிரவாதம் தொடர்பான சூழல்களில் நன்றாக செயல்படுவது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

வேறு இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட பெல்ஜியன் மலீன்வா வகை நாய் ஒன்று ஏற்கனவே கொல்கத்தா காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒசாமா பின் லேடன்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

புதிதாக வாங்கப்படும் நாய்கள் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டபின் அவையும் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் காவல் படையில் (சி.ஆர்.பி.எஃப்) பெல்ஜியன் மலீன்வா வகை நாய்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.

நக்சலைட்டுகள் பிரச்சனை உள்ள பகுதிகளிலும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பெல்ஜியன் மலீன்வா வகை நாய்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா காவல் துறையும் அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

Back to top button