செய்திகள்

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் கமரா பாவனைக்கு வந்தது!

வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துதல், செல்ஃபி எடுத்தல், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல், சாப்பிடுதல் மற்றும் வாசித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக்  கண்டுபிடிக்கவென, உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கைபேசி பாவனையாளர்களைக் கண்டுபிடிக்கவென  அதிநவீன தொழிநுட்பத்துடன் அமைந்த கமராக்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், இவற்றை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரீட்சார்த்த முறையில் பொருத்துவது என்றும், அம்முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் அது சட்டமாக்கப்படும் எனவும் நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசு தெரிவித்திருந்திருந்த பின்னணியில், தற்போது இக்கமராக்கள் பொருத்தப்படுகின்றன.

இதன்படி முதலாவது கமரா சிட்னியின் M4 நெடுஞ்சாலையில் Prospect பகுதியில் Clunies Ross Street-க்கு அருகில் ஏனைய கமராக்களுடன் சேர்த்து பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தைவைத்து நீங்கள் வீதியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தீர்களா, அல்லது உங்கள் கைபேசியில் முகப்புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தீர்களா என்பதை கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
2016-17 நிதியாண்டு காலப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கைபேசி பாவனைக்கான 40 ஆயிரம் அபராதக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மில்லியன் கணக்கானக்கானவர்கள் வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவதாகவும் இவர்களைக் கண்டுபிடிக்க இப்படியான நடவடிக்கை தேவை எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

கைபேசி பாவனையால் கடந்த 5 ஆண்டுகளில்  நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 184 விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 7 பேர் பலியாகியதுடன் 47 பேர் காயமடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கமராக்கள் பரீட்சார்த்த முயற்சியின் அடிப்படையில் பொருத்தப்படுவதால் இவற்றைவைத்து உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதை கண்டுபிடிக்கும் கமரா பாவனைக்கு வந்தது! 1

Back to top button