விளையாட்டு

டோக்கியோ 2020 ஒலிம்பிக் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணம்

இவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறவிருந்தது.

எனினும் இவ்விழாவை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  சுர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி) அங்கத்தவர் டிக் பௌண்ட்  (Dick Pound.)தெரிவித்துள்ளார்

இவ்விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தான் அறிந்தவரை பெரும்பாலும் 2021 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இப்போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜப்பானும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவந்தன.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா பிற்போடப்படலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தெரிவிததிருந்தார்ஆனால், இரத்துச் செய்வது விருப்பத்துக்குரியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட பல்வேறு செ யற்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆராயவேண்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவத்த பின், ஜப்பான் பிரதமர் தனது கருத்தை வெளியிட்டார்.

பிரதான விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முழு அளவில் நடத்த எண்ணியுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்த பிரதமர் அபே, விழாவை தி;ட்டமிட்டவாறு நடத்துவது இயலாமல்போகலாம் என நாடாளுமன்ற அமர்வொன்றின்போது முதல் தடவையாக கூறினார்

‘முழு அளவில் நடத்துவது சிரமமாக இருந்தால் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளித்து அதனை பிற்போட நாம் தீர்மானிக்கவேண்டும்’ என்றார்.

‘இவ் விடயத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு இறுதித் தீர்மானத்தை எடுப்பதாக இருந்தாலும் விளையாட்டு விழாவை இரத்துச் செய்வது விரும்பத்தக்கதல்ல’ என ஜப்பான் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Back to top button