செய்திகள்

கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் பற்றிய கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்

இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அற்றவை என்ற பரவலான கருத்து இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்த தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் திரும்பபெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து பாலியல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை ரத்து செய்யமுடியாது என்று கூறிய அதேநேரத்தில், இருபாலர் பயிலும் கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது என்ற கருத்தை தீர்ப்பில் சேர்த்திருந்தார்.

தனது கருத்தில் கிருத்துவ கல்விநிலையங்களில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்றும், இந்த கல்விகூடங்களில் தரமான கல்வி கொடுக்கபட்டாலும், நன்னெறியை போதிக்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி என தனது கருத்தை தெரிவித்தார்.

நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்து வழக்குக்கு பொருத்தமற்றது என மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி முறையிட்ட பின்னர், அவர் வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்த தகவலை திரும்பபெற்றுள்ளார். தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த அவரது கருத்து இடம் பெற்ற பகுதி எண் 32 முழுமையாக நீக்கப்பட்டு, தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் ”நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்துக்கும் , பாலியல் குற்றம் பற்றிய வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேராசிரியர்கள் மீது உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எங்கள் கல்லூரியில் உள்ள கமிட்டி தீர விசாரித்த பின்னர், இருவரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டோம். சாமுவேல் என்ற பேராசிரியர் கமிட்டி அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதில் நீதிபதி தெரிவித்த கருத்து தொடர்பு இல்லாதது என்பதால் நாங்கள் முறையிட்டோம். அவர் தெரிவித்த கருத்தை பின்வாங்கிவிட்டார்,”என்றார் முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசன்.

மேலும் அவர் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பணிபுரியும் பெண் பேராசிரியர்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

திருத்தத்தை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள தீர்ப்பில், கல்லூரி நிர்வாகம் தீர்ப்பிற்கு தொடர்பில்லாத கருத்தாக பகுதி எண்:32ல் கூறப்பட்ட கருத்து உள்ளது என தெரிவித்ததால், தனது கருத்து நீக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பகுதி நீக்கப்பட்டதால், வெளியான தீர்ப்பில் எந்த மாறுதலும் இல்லை என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

”தீர்ப்பு கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கருத்து வழக்குக்கு பொருத்தமற்றது என்பதால் அதை நீக்கவேண்டும் என முறையிட்டிருந்தார்கள். அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தீர்ப்பின் முடிவில் மாறுதல் இல்லை. மாற்றங்களுடன் தீர்ப்பை வெளியிட உத்தரவிட்டுள்ளேன் ,” என தெரிவித்துள்ளார் நீதிபதி வைத்தியநாதன்.

தொடர்பற்ற கருத்து: நீதிபதி ஹரிபரந்தாமன்

கிறிஸ்துவ நிறுவனங்கள் பற்றி நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்துக்கு கிறிஸ்துவ நிறுவனங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் எழுந்ததால், அவரது கருத்து பின்வாங்கப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.

”நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்து வழக்கோடு தொடர்பு இல்லாதது. அது வழக்கில் பேசுபொருள் அல்ல. கிறிஸ்துவ நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு இருக்காது என பெற்றோர் கருதுவதாகவும், அங்கு மதமாற்றம் நடப்பதாகவும் அவர் கூறியதை ஏற்கமுடியாது. பாலியல் புகார் மீது மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விடுத்து, தொடர்பில்லாத கருத்தை வெளியிட்டிருந்தார்,”என்கிறார் அவர்.

அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி, பணம் மற்றும் தேவையான உதவிகள் கிடைக்க பாலியல் உறவுக்கு உட்படவேண்டும் என பேராசிரியர் நிர்மலாதேவி பேசியதாக சமூகவலைத்தளங்களில் ஆடியோ வெளியானது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார்.

நிர்மலா தேவி வழக்கை சுட்டிக்காட்டிய ஹரிபரந்தாமன், பேராசிரியர் நிர்மலா தேவி பணிபுரிந்த நிறுவனம் கிறிஸ்துவ நிறுவனம் அல்ல, ஒரு மதம் சார்ந்த நிறுவனங்களில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற கருத்து இருப்பதாக கூறியது தவறானது. இதற்கு அருப்புக்கோட்டை வழக்கு சான்று என்கிறார் அவர்.

Back to top button