சினிமா

பிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு – மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை

பிக் பாஸ் முகேன் ராவ் : மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதைபடத்தின் காப்புரிமை VIJAY TELEVISION

மலேசியாவில் காவல்துறைப் பணியில் இருந்திருக்க வேண்டிய ஒருவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் மலேசியாவில் மட்டுமல்ல, அகில உலகமும் நன்கறிந்த நட்சத்திரமாகி விட்டார். அவரது பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

பிக் பாஸ் 3 தொடக்கத்தில் அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், ஒரு கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். நேர்மையாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டியிருக்கிறார்.

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று, அதாவது ஃபைனல் டிக்கெட் பெற்று நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற முதல் நபர் முகேன். முதல் சீசனில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் இரண்டாவது சீசனில் ஜனனியும் ஃபைனல் டிக்கெட் பெற்றனர். ஆனால் இறுதியில் அவர்கள் வெற்றி பெறவில்லை.

அபிராமியுடன் இருந்த நட்புறவு, தர்ஷனுக்கும் இவருக்கும் இருந்த நட்பு, கலைப் பொருட்கள் செய்வது, பாடல்கள் பாடுவது என யாராலும் வெறுக்க முடியாத ஒரு நபராகவே முகேன் திகழ்ந்தார் என்று கூறலாம்.

யார் இந்த முகேன் ராவ்?

தங்கள் மகன் காவல்துறை பணியில் சேர வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. முகேனுக்கோ இசையில்தான் அதிக நாட்டம்.

சிறு வயது முதலே இந்த ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் முகேன். தந்தை பிரகாஷ் ராவ் நல்ல பாடகர், மேடை நாடக நடிகர் என்பதால் மகன் முகேனுக்கும் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

13 வயதிலேயே சொந்தமாக பாடல்களும் எழுத ஆரம்பித்தாராம் முகேன். விடிய விடிய தன் மகன் பாடல் எழுதுவதைக் கண்டு ரசித்திருக்கிறார் பிரகாஷ் ராவ். சில சமயம் அதிகாலை வேளையில்கூட இவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி, தாம் எழுதிய பாடல்களைப் படித்தும் பாடியும் காட்டுவாராம்.

மனங்களை வென்ற வெற்றியாளரின் கதைபடத்தின் காப்புரிமை MUGEN RAO / FB

“தூக்கக் கலக்கமாக இருந்தாலும் முகேன் எழுதிய பாடல்களை கேட்கும் போது உற்சாகமாக இருக்கும். அவரது முதுகில் தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொன்ன பிறகு தான் மீண்டும் தூக்கம் வரும். அவரும் என்னுடைய இந்த பாராட்டுக்காக காத்திருப்பார்.”

மலேசியாவைப் பொறுத்தவரை உள்ளூர் கலைஞர்கள் பிரபலமடைவதற்கு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அல்லது மேடை நிகழ்ச்சிகள் போன்ற தளங்களில் பயணித்திருக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றளவும் பலர் இந்த நான்கு தளங்களை குறிவைத்தே இயங்கி வருகின்றனர். ஆனால் இவற்றில் அதிகம் தடம் பதிக்காமல் சுயமாக தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டுள்ளார் முகேன். சமூக ஊடகங்கள் மூலமாக அவர் நேரடியாக மக்களுடன் பேசினார். அதனூடே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

“தனி இசைத் தொகுப்புகள், யூடியூப் தளத்தில் பல்வேறு சுவாரசியமான காணொளிப் பதிவுகள், சில தமிழ், மலாய் மொழித் திரைப்படங்களில் பங்களிப்பு என ஆயிரக்கணக்கான மலேசிய இளைஞர்களை தன்வசம் ஈர்த்துள்ளார் முகேன். அவரது பாடல்களை முணுமுணுக்காத மலேசியத் தமிழ் இளைஞர்கள் இல்லை எனுமளவுக்கு ரசிகர் கூட்டம் விரிவடைந்துள்ளது. இவரது பாப் பாடல்கள் அனைத்துமே துள்ளல் ரகம் தான். அதைக் கேட்கும் எவரும் நிச்சயம் ரசிப்பார்கள்” என்கிறார் மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கத் தலைவர் விஜய் எமர்ஜென்சி.

மனங்களை வென்ற வெற்றியாளரின் கதைபடத்தின் காப்புரிமை MUGEN RAO / FB

மேலும், முகேனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக குறிப்பிடும் அவர், பெண் ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

“முகேன் மிக நன்றாகப் பாடுவார். அழகாகச் சிரிப்பார். அவருக்கு கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, மலேசியா திரும்பியதும் குறைந்த பட்சம் மூன்று படங்களில் அவர் ஒப்பந்தமாவது நிச்சயம்,” என்கிறார் விஜய்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பாமல், வாய்ப்புகள் தேடி வரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் முகேன் இன்றைய இளைய சமுதாயத்துக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் என்கிறார்கள் மலேசிய கலைத்துறை பிரமுகர்கள்.

“சிறு வயதிலேயே பல துன்பங்களை பார்த்தவர்”

முகேனின் இளம் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. குடும்பம் சற்று ஏழ்மையான நிலையில் இருந்தபடியால் தனது பல விருப்பங்களை அவர் சுருக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள் நண்பர்கள். பெற்றோரை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பாராம் முகேன்.

பொது இடங்களுக்குச் செல்லும் போது குளிர்பான டின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்தால் அவற்றைச் சேகரித்து, பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் காசை செலவுக்குப் பயன்படுத்தி உள்ளார். கால் டாக்சியும் ஓட்டியுள்ளார் என்று நினைவு கூர்கிறார் முகேனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பாஸ்கரன்.

மனங்களை வென்ற வெற்றியாளரின் கதைபடத்தின் காப்புரிமை MUGEN RAO / FB

“என்னைப் பொறுத்தவரை அவர் பாசக்கார தம்பி. என்னை அண்ணா என்றுதான் அன்பாகக் குறிப்பிடுவார். குடும்பம் சிரமத்தில் இருக்கிறது என்று அடிக்கடி வருத்தப்படுவார். என் காரில் அழைத்துச் சென்று அவர் வீட்டில் விடுவதாகச் சொன்னால் கூட வேண்டாம் என்று அவசரமாக மறுப்பார். வீட்டில் எந்த வசதியும் இல்லை என்று சொல்ல கூச்சப்படுவார். ‘அதனால் என்ன… நீ என் தம்பி… உன் வீட்டுக்கு அண்ணன் தானே வருகிறேன்’ என்று சமாதானப்படுத்தி முதன்முறை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

“அவர் சொன்னது உண்மை தான். அதிக வசதிகளற்ற வீடு. அங்கு பல இரவுகள் தங்கியுள்ளேன். அந்த நிலையில் இருந்து குடும்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இருப்பார் முகேன்” என்று பாஸ்கரன் கூறுகிறார்.

சிறந்த பாடகர், நடிகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் மீறி நல்ல குணமும் மனிதநேயமும் கொண்ட பாசக்கார சகோதரர்

மொத்தத்தில், உணர்வுப்பூர்வமான, சவால்கள் நிறைந்த பால்ய பருவத்தை போராடிக் கடந்த முகேன், இப்போது சாதனைகளை நோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

Back to top button