செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்; முஸ்லிம்களுக்கு மாற்று இடம்

முக்கிய சாராம்சம்

  1. 1992ல் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாபர் மசூதியை இடித்ததைத் தொடர்ந்து பிரச்சனை வெடித்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுக்க பரவிய மதக் கலவரங்களில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
  2. ராமர் பிறந்த இடம் அந்த மசூதி உள்ள இடம்தான் என்றும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் இந்து அமைப்புகள் கூறுகின்றன.
  3. 1949 டிசம்பரில் இரவு நேரத்தில் அந்த மசூதியில் ராமர் சிலையை சிலர் கொண்டுவந்து வைக்கும் வரையில், அந்த இடத்தில் தாங்கள் வழிபாடு செய்து வந்ததாக இஸ்லாமியர் தரப்பில் கூறுகின்றனர்.
  4. அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.
  5. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேரடிச் செய்தி

  1. பத்திரிகையாளர் பகுதியில் கொண்டாட்டம்

    அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட உத்தரவுகள், அறிவிக்கைகளை மீறி உச்சநீதிமன்றத்தின் பத்திரிகையாளர் பகுதியில் கொண்டாட்டம் வெடித்தது. இது தெளிவான சட்டமீறல் என்கிறார் உச்சநீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி.

    இஸ்லாமிய தரப்பு என்ன சொல்கிறது?

    “தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவனத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்” என்று சுன்னி வக்ஃப் வாரிய மூத்த வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜிலானி தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் அவர் கூறினார்.

    பாகிஸ்தான் அமைச்சர் விமர்சனம்

    ‘வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது’ என்று பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் ஹுசைன் ட்விட்டரில் அயோத்தி தீர்ப்பை விமர்சித்துள்ளார்.

    ‘கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்க வேண்டும்’

    மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் இருந்த இடம் இந்துக்களுக்குத் தரப்படவேண்டும்.

    முஸ்லிம்களுக்கு மாற்று இடம் தரப்படவேண்டும்.

    கோயில் கட்டுவதற்கு 3 – 4 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

    உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடம் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ‘சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்’

    சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை உச்ச நீதிமன்றம்.

    ‘வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம்’

    சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும்.

    ‘பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது’

    1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.

    அயோத்தி

    நிர்மோஹி அகாரா மனு நிராகரிப்பு

    இந்து தரப்பில் ராம் லல்லா மற்றும் நிர்மோஹி அகாராவால் பிரதிநித்துவப் படுத்தப்பட்டது. நிர்மோஹி அகாராவின் மூன்றாவது மனு நிராகரிக்கப்படுகிறது.

    ‘தொழுகை நடத்தியதற்கான ஆவணத்தை அளிக்கவில்லை’

    தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது. உள்முற்றம் யாரது கட்டுப்பாட்டில் இருந்தது என்பது மிகவும் முக்கியம்.

    முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை. இருப்பினும் இந்துக்கள் ராம் சபுத்ராவில் தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள்.

    ஆனால், கருவறைக்குள் அவர்கள் உரிமை கோருகிறார்கள்.

    1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.

    தலைமை நீதிபதி மேலும் கூறுவது என்ன?

    நம்பிக்கையின் அடிப்படையில் இடத்தின் உரிமையாளர் யார் என்பதை அணுக முடியாது. சட்டத்தின் அடிப்படையிலேயே அணுக முடியும்.

    பயணிகளின் ஆவணங்களை உள்ளாய்வு செய்ய வேண்டும். பயணிகள் பார்த்ததை, அவதானித்ததை எச்சரிக்கையுடன்தான் அணுகி ஒரு முடிவுக்கு வர முடியும்.

    வரலாற்று தகவல்கள் அயோத்தி ராமர் பிறந்த இடமென குறிக்கின்றன.இஸ்லாமியர்கள் அதை பாபர் மசூதி என்கின்றனர்.

    ‘குறைத்து மதிப்பிட முடியாது’

    இந்திய தொல்லியல் துறையின் நிபுணத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மசூதி இருந்த இடத்துக்கு கீழே இருந்த இடம் இடிக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது என்கிறார் கோகோய்.

    ‘பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை’

    பாபர் மசூதியை கட்டியது மீர் பாகி. இறையியல் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது.

    ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது; அதைப் புறந்தள்ள முடியாது என்று கோகோய் கூறினார்.

    அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

    அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சற்று நேரத்தில் தீர்ப்பு

    உச்சநீதிமன்ற அவைக்கு அரசியல் சாசண அமர்வில் உள்ள ஐந்து நீதிபதிகளும் வந்துள்ளனர்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு விவரம் தெரியவரும்.

    இது ஏகமனதாக தீர்ப்பு என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    தீர்ப்பை வாசிக்க 30 நிமிடங்கள் ஆகும் என்று கூறினார் கோகோய்.

Back to top button