செய்திகள்

ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  தற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் கொண்டுள்ள நிலையான சேவையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் ஆகும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாத காலப்பகுதி செல்வதுடன் இதன் காரணமாக பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன் அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Back to top button